Jul 24, 2025 - 06:41 AM -
0
கடந்த ஜூன் 12ஆம் திகதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 241 பேர் இறந்தனர், அவர்களில் 53 பேர் பிரித்தானிய பிரஜைகள் ஆவர்.
இந்நிலையில் விபத்தில் பலியான 2 இங்கிலாந்து நாட்டவரின் உடல்களுக்கு பதிலாக தவறான உடல் அவர்களது குடும்பங்களுக்கு அனுப்பப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடல்கள் இங்கிலாந்தில் உள்ள சில குடும்பங்களுக்கு தவறுதலாக அனுப்பப்பட்டதாக சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள இரண்டு குடும்பங்களுக்கு வேறு நபர்களின் உடல்கள் அல்லது பலரது உடல்களின் எச்சங்கள் அனுப்பப்பட்டுள்ளன. லண்டன் மரண விசாரணை அதிகாரி டிஎன்ஏ பரிசோதனை செய்தபோது இது வெளிச்சத்துக்கு வந்தது.
இதனால் ஒரு குடும்பம் இறுதி சடங்கை ரத்து செய்தது. மற்றொரு குடும்பத்திற்கு பலரது உடல் பாகங்கள் ஒன்றாக அனுப்பப்பட்டு, அவற்றை பிரித்த பிறகு இறுதி கிரியை செய்ய நேர்ந்தது.
இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவிக்கையில், உடல்களை அடையாளம் காண உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டன என்றும், உடல்கள் கண்ணியத்துடன் கையாளப்பட்டன என்றும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து இங்கிலாந்து அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அகமதாபாத் சிவில் வைத்தியசாலையில் டிஎன்ஏ சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், ஏர் இந்தியாவுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை என்றும் இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடல்கள் வைத்தியசாலையால் சீல் செய்யப்பட்ட சவப்பெட்டிகளில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
பிரித்தானிய குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ஜேம்ஸ் ஹீலி-பிராட், குடும்பங்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளதாகவும், இதற்கு விளக்கம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.