Jul 24, 2025 - 07:42 PM -
0
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை மோதல்களில் தாய்லாந்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
இதில், 11 பொதுமக்கள் மற்றும் ஒரு படைவீரர் உயிரிழந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையே நூற்றாண்டுக்கும் மேலாக எல்லைப் பிரச்சினை நீடித்து வரும் நிலையில், இன்று (24) அதிகாலையில் மோதல் தீவிரமடைந்தது.
இரு தரப்பினரும் பரஸ்பரம் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், மோதலைத் தூண்டியதாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டினர்.
கம்போடியா, தாய்லாந்து தனது பகுதியில் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டியது. அதற்கு பதிலளிக்கும் வகையில் தாய்லாந்து கம்போடியாவின் இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டது.
இருப்பினும், கம்போடியா தனது பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.
இந்த மோதல், பிராந்தியத்தில் உள்ள புராதன விகாரைகள் மற்றும் எல்லைப் பகுதிகளை உள்ளடக்கிய நீண்டகால பிரச்னையின் ஒரு பகுதியாகும். குறிப்பாக ப்ரி விஹியர் மற்றும் தா மோவான் தோம் விகாரைகள் தொடர்பான பிரச்சினைகள் இதில் முக்கியமானவையாகும்.
தாய்லாந்தின் மக்கள் தொகையில் 97.5% பேர் பௌத்தர்களாகவும், கம்போடியாவின் மக்கள் தொகையில் 97.1% பேர் பௌத்தர்களாகவும் உள்ளனர்.
இரு நாடுகளும் தேரவாத பௌத்தத்தின் முக்கிய மையங்களாகக் கருதப்பட்டாலும், இந்த மோதல்கள் மதரீதியானவை அல்ல, மாறாக எல்லை மற்றும் புராதன கோயில்களைச் சுற்றிய வரலாற்று மற்றும் புவியியல் காரணங்களால் உந்தப்பட்டவையாக உள்ளன.