Jul 27, 2025 - 08:03 PM -
0
காசாவில் பஞ்சம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. உணவு மற்றும் மருந்து காசாவிற்குள் நுழைய அனுமதிக்க மூன்று பகுதிகள் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
காசாவில் பட்டினியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 128ஆக உயர்ந்துள்ள நிலையில் சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாக இந்த முடிவுக்கு இஸ்ரேல் தள்ளப்பட்டுள்ளது.
மனிதாபிமான உதவிகள் அந்தப் பகுதியை அடைய அனுமதிக்க ஒவ்வொரு நாளும் சில மணிநேரங்களுக்கு தாக்குதல்களை நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இந்த குறுகிய கால போர்நிறுத்தம் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்குப் பொருந்தும் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய அறிக்கையின்படி, அல்-மவாசி, டேயர் அல்-பலா மற்றும் காசா நகரில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இஸ்ரேல் எந்த இராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது.
மற்ற பகுதிகளில், வழக்கம் போல் தாக்குதல்கள் தொடரும். மறு அறிவிப்பு வரும் வரை இது அமுலில் இருக்கும். காசாவிற்கு உதவிகளை வழங்குவதற்காக சில விசேட வழிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாதுகாப்பானவை என அடையாளப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.