Jul 29, 2025 - 03:04 PM -
0
அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாளொன்றுக்கு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. தற்போது வழங்கப்படுவதாகக் கூறப்படும் 1,700 ரூபாய் கூடப் போதுமானதாக இல்லை. ஆகவே, எமது அரசாங்கம் முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாடலை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி பவுல் ராஜ் தெரிவித்தார்.
இன்று (29) நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெருந்தோட்ட நிறுவனங்களுடனும் முதலாளிமார் சம்மேளனத்துடனும் தனித்தனியாகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆரம்பகட்டமாக, அவர்களின் ஒத்துழைப்புடன், தற்போதைய பொருளாதார அடிப்படையில் குறைந்தபட்சம் இரண்டாயிரம் ரூபாயாவது கிடைக்க வேண்டும் என்ற நிலையில் நாங்கள் உள்ளோம்.
அரசாங்கம் என்ற வகையில், மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு, காணி, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வழங்க வேண்டும். இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டாலும், அத்தியாவசியத் தேவைகளுக்காக முழுப் பணமும் செலவாகிவிடுமானால், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு அந்தப் பணம் போதாது.
அனைத்து மக்களுக்குமான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து தோட்டப் பகுதிகளிலும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், முன்பள்ளிகள் போன்றவை குறித்து பேசி வருகிறோம். சம்பள உயர்வு மட்டுமே மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாது.
முதலாளிமார் சம்மேளனத்துடன் பேசி, அரசு சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பது கட்டாயமானதொரு விடயமாகும். தற்போது காணப்படும் தோட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. வருமானத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தோட்டப் பகுதிகளுக்கு ஊக்குவிப்பு வழங்க வேண்டும். இது குறித்து பேசவிருப்பதோடு, இதுதொடர்பாக ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார் என தெரிவித்தார்.
--

