Jul 30, 2025 - 07:19 PM -
0
ஐரோப்பிய இராணுவ கூட்டமைப்பான 'நேட்டோ'வில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி புட்டின் உக்ரைன் மீது போர் தொடங்கி தாக்குதல் நடத்தி வருகிறார். இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி மற்றும் ஆயுதங்கள் வழங்கி வருகிறது.
ரஷ்யாவுக்கு வடகொரியா உதவுகிறது. சீனா மறைமுகமாக உதவுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். போரை உடனடியாக கைவிட வலியுறுத்தி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளிட்ட உலக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் 3 ஆண்டுகளாக போர் தாக்குதல் தொடர்கிறது.
இந்நிலையில் ரஷ்ய இராணுவத்தினர் உக்ரைனை குறிவைத்து நள்ளிரவில் திடீர் தாக்குதல் நடத்தினர். தென்கிழக்கு சபோரிஜியா பகுதியில் உள்ள சிறைச்சாலையை குறிவைத்து இஸ்கந்தர் ஏவுகணைகளை வீசியும், ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் அந்த சிறைச்சாலை கட்டிடம் தூள் தூளாக சிதைந்தது. இந்த கோர தாக்குதலில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தநிலையில், தற்போது பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 100இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிறைச்சாலையில் இருந்து பலர் தாக்குதலை பயன்படுத்தி தப்பியோடினர்.