Aug 4, 2025 - 10:19 AM -
0
வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா சீதையம்மன் ஆலயத்திற்கு வனவிலங்கு திணைக்களத்திற்குச் சொந்தமான ஒரு ஏக்கர் காணியை வழங்குவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்று (03) நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அனு ஸ்ரீ தியானசாலை மண்டபத்தை திறந்து வைத்து உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டார். இந்த திறப்பு விழா, ஆலயத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, அனு ஸ்ரீ ஜோய்குப்தா குடும்பத்தினர், பிரதி கல்வி அமைச்சர் மதுரசேன விரத்ன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சீதையம்மன் ஆலயத்திற்கு இந்தியாவிலிருந்து ஏராளமான பக்தர்கள் வழிபாட்டிற்காக வருகை தருகின்றனர்.
இந்த வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவிலிருந்து வருபவர்களே அதிகம். குறிப்பாக, சீதையம்மன் ஆலயம், கோணேஸ்வர ஆலயம், கதிர்காமம் போன்ற புனிதத் தலங்களுக்கு வழிபாட்டிற்காக வருகின்றனர். இது நமக்கு பெரும் சக்தியாகும்.
நாம் அனைவருக்கும் தெரிந்தபடி, இலங்கை பொருளாதார ரீதியில் பெரும் சவால்களை எதிர்கொண்டிருந்தது. இதனை மாற்றியமைக்க, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்க வேண்டும். இந்த ஆண்டு 30 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது எமது இலக்காகும்.
தற்போது 1.3 சதவீத வெளிநாட்டு பயணிகள் வருகை தந்துள்ளனர், இதில் பெரும்பாலானவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். கடந்த ஆறு மாதங்களில் 3.7 பில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டுக்குள் 7.5 பில்லியன் டொலர் வருமானத்தைப் பெறுவதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.
இந்தியாவிலிருந்து அதிகமான பக்தர்களை இந்த ஆலயத்திற்கு அழைத்து வருவதற்காக, இந்த ஆலயத்தை மேலும் அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளோம். இப்பகுதியில் ஏராளமான சுற்றுலா விடுதிகள் உள்ளன. இராமாயண வரலாற்றுடன் இணைந்து இப்பகுதியை மேலும் மேம்படுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிகளவில் வருகை தருவார்கள்.
நுவரெலியா பிரதேசத்திற்கு மேலும் பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதன் மூலம், இப்பகுதி மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும்" என தெரிவித்தார்.
--