Nov 26, 2025 - 05:51 PM -
0
அ.தி.மு.க. சிரேஸ்ட நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்த செங்கோட்டையனுக்கும், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கே.ஏ.செங்கோட்டையன் கோரிக்கை வைத்த நிலையில், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அவர், பிறகு கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று (26) செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது இராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார்.
ஏற்கனவே, ஆலங்குளம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் ராஜினாமா செய்துவிட்டு, தி.மு.க.வில் இணைந்த நிலையில், தற்போது செங்கோட்டையனும் இராஜினாமா செய்துள்ளார்.
தொடர்ந்து செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், த.வெ.க. நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்யை சந்திப்பதற்காக சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டிற்கு தற்போது செங்கோட்டையன் சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

