Dec 4, 2025 - 05:39 PM -
0
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கேகே ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கவில்லை.
நாங்கள் மேல்முறையீடு செய்யத் தயாராகி வந்தோம். ஆனால், அதற்குள் உயர் நீதிமன்ற பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்போடு மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டது.இது சட்டவிரோதமானது” என வாதிடப்பட்டது.
இதற்கு மனுதாரர் தரப்பில், “தனி நீதிபதி உரிய விசாரணை நடத்தி தான் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், கோவில் நிர்வாகம், காவல்துறை நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை. நீதிமன்ற உத்தரவை பின்பற்ற பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
இருப்பினும், திடீரென 144 தடை உத்தரவைப் பிறப்பித்தனர்.” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் வாதம் முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கில் இன்று மாலை 4.00 மணியளவில் தீர்ப்பளித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசு தரப்பின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

