Dec 6, 2025 - 05:51 PM -
0
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேசப் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (6) இடம்பெறுகின்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ரிக்கல்டன் - டிகொக் ஆகியோர்களமிறங்கினர்.
இதில் ரிக்கல்டன் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனையடுத்து டி காக் கேப்டன் பவுமா இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர்.
அதிரடியாக விளையாடிய டிகொக் அரை சதம் கடந்தார். பவுமா 48 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டிகொக் சதம் அடித்து அசத்தினார்.
அவர் 106 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து பிரேவிஸ் 29 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 47.5 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 270 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இந்திய தரப்பில் குல்தீப், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 271 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி இந்திய அணி துடுப்பாடவுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இன்றைய ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வென்றுள்ளது.
2023 ஆண்டு இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச உலக கிண்ண இறுதிப் போட்டியில் இருந்து 20 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி நாணய சுழற்சியில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இன்றைய போட்டியின் போது அணித் தலைவர் கே.எல் ராஹூல் தமது இடது கையினால் நாணயத்தை சுழற்றி வெற்றி பெற்றார்.
இது மோனி மோர்க்கல் வழங்கிய ஆலோசனை என தெரிவிக்கப்படுகின்றது.

