Dec 12, 2025 - 04:53 PM -
0
"இயற்கைப் பாதிப்பு எவருக்கும் ஏற்படலாம். எனினும், தவறான முறையில் பெறப்படும் நிவாரணம் எவருக்கும் பயனாக அமையாது. எனவே, நிவாரணம் கோருபவர்கள் தங்கள் மனசாட்சிக்கு அமையக் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது மட்டக்களப்பில் பாதிப்பு குறைவு என்பதால், எங்களை விடவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்" என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இன்று (12) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்:
"மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தத்தினால் மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், எமது மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் இருவர் வவுனியா மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 11 வீடுகள் முழுமையாகவும், 1,946 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு, நேற்று மாலை வரை 6,238 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த கால அனர்த்தங்களின் போது இடம்பெயர்ந்து முகாம்களிலோ அல்லது உறவினர் வீடுகளிலோ தங்கியிருந்தவர்களுக்குக் கூடுதலாக நிவாரணம் வழங்கப்பட்டது.
கிராம உத்தியோகத்தர்கள் அவர்கள் தொடர்பான விபரங்களை முதலில் சேகரித்து அனுப்பினர். தற்போது அரசாங்கம் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக விபரங்களைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. அதேவேளை, பாதிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதற்கான கொடுப்பனவுகளும் விரைவாக வழங்கப்படும்.
பாதிக்கப்பட்ட எவரும் விடுபடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். அதேசமயம், பாதிக்கப்படாதவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நிவாரணங்களைப் பெற முயற்சிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
அனர்த்த நேரத்தில் கிராம உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உங்களுக்கு உதவி செய்யக் காத்திருந்தனர். எனவே, உங்கள் கோரிக்கை நியாயமாக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
--

