Dec 12, 2025 - 09:49 PM -
0
தற்போது விளக்கமறியலில் உள்ள முன்னாள் மேலதிக இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு இலஞ்சம் வழங்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காப்புறுதி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தகவல்களின்படி, தற்போது விளக்கமறியலில் உள்ள முன்னாள் மேலதிக இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு இலஞ்சம் வழங்குவதற்கான கொடுப்பனவுகளுக்கு இந்தச் சந்தேகநபர் அனுமதி வழங்கியமை தெரியவந்துள்ளது.
இதன்படி, ஊழல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் அரச ஊழியர் ஒருவருக்கு இலஞ்சம் வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணைகள் நிறைவடையாத காரணத்தினால் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது.
இதன்போது குறித்த காப்புறுதி நிறுவனம் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த வாதத்தில், தனது கட்சிக்காரரான நிறுவனமோ அல்லது அதன் அதிகாரியோ எவ்வித இலஞ்சக் கொடுக்கல் வாங்கல்களிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்தார்.
விளக்கமறியலில் உள்ள மேலதிக இரசாயனப் பகுப்பாய்வாளரின் சேவையைத் தமது நிறுவனம் சட்டபூர்வமான முறையிலேயே பெற்றுக்கொண்டது என்றும், நிறுவன விதிக் கோவையின் கீழ் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தனியார் சேவைகளை வழங்குவதற்குச் சட்டரீதியான வாய்ப்பு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமது நிறுவனம் கடந்த காலங்களில் விபத்துக்குள்ளான வாகனங்கள் மற்றும் ஏனைய விபத்துகளுக்காக 13 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டஈட்டை வழங்கியுள்ள நிலையில், இலஞ்சம் கொடுத்து சட்டவிரோத இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெற வேண்டிய அவசியம் என்ன என்று ஜனாதிபதி சட்டத்தரணி கேள்வி எழுப்பினார்.
சமீபத்திய அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு 3 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டஈட்டுத் தொகையை வழங்க வேண்டியுள்ள நிலையில், இந்தச் சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டால் அந்தப் பணிகள் முழுமையாகப் பாதிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.
சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு சந்தேகநபருக்கு அறிவுறுத்திய நீதவான், அவ்வாறான முறைப்பாடுகள் கிடைத்தால் பிணை ரத்து செய்யப்பட்டு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என எச்சரித்தார்.
அத்துடன், சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டதுடன், வழக்கை மீண்டும் எதிர்வரும் 22ஆம் திகதி அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
