Mar 3, 2026 - 11:09 PM -
0
யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை - நுவரெலியா பிரதான வீதியின் டிரேட்டன் சந்தியில் இன்று (03) மாலை 5.00 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த தோட்டத்தில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
"10 கிலோ கொழுந்துக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில்லை", "ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்றரை நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டும்", "10 கிலோவுக்கு 6 கிலோ கழிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்", "வேலை நேரம் முறையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு, "உரிமை கிடைக்கும் வரை போராடுவோம்" என அவர்கள் முழக்கமிட்டனர்.
இது குறித்துத் தொழிலாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில்:
"அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவுகள் எதுவும் எமக்கு முறையாக வழங்கப்படுவதில்லை. இது குறித்து நியாயம் கேட்டால், நாம் சத்தமிட்டுப் பேசுவதாகக் கூறி நிர்வாகம் எமது வேலையை நிறுத்துகிறது. தொழிலாளர்களுக்குரிய எந்தச் சலுகைகளும் வழங்கப்படுவதில்லை. இதுவரை குளவி கொட்டுக்கு இலக்காகி இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையிலும், தொழிலாளர்கள் சுகயீனமுற்றால் வாகன வசதிகளோ அல்லது வேறு அவசரத் தேவைகளோ நிர்வாகத்தால் செய்து தரப்படுவதில்லை. சம்பளம் உரிய நேரத்திற்கு வழங்கப்படுவதில்லை; நாம் அடிமைகளாகவே நடத்தப்படுகிறோம்" எனத் தெரிவித்தனர்.
தமது உரிமைகளைப் புறக்கணிக்கும் தற்போதைய தோட்ட நிர்வாகத்தை உடனடியாக மாற்ற வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.
--