Mar 13, 2026 - 11:52 PM -
0
போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்த 10 சந்தேக நபர்களுக்கும் தடுப்புக்காவல் உத்தரவைப் பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் நாட்டின் தெற்கு கடற்பரப்பில் வைத்து இந்த இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றிலிருந்து 654 கிலோகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, குறித்த போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் 10 சந்தேக நபர்களையும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
கடற்படையினரால் ஆழ்கடலில் வைத்து 5 சந்தேக நபர்களுடன் பயணித்த ஒரு படகும், அதனுடன் தொடர்புடைய மேலும் 5 சந்தேக நபர்களுடன் பயணித்த மற்றொரு படகும் கைப்பற்றப்பட்டு, நேற்று (12) திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள், கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 49 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், அவர்கள் இரணவில, மகாவெவ, மெல்சிறிபுர, வென்னப்புவ, நீர்கொழும்பு, நாக்குலுகம, தங்காலை, நெடோல்பிட்டிய மற்றும் கந்தர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 176 கிலோகிராம் 568 கிராம் ஹெரோயின், 478 கிலோகிராம் 326 கிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றை வைத்திருந்தமை, இறக்குமதி செய்தமை மற்றும் கடத்தியமைக்காகவும், அத்துடன் 8 பிஸ்டல்கள், 15 மெகசின்கள், 2 டி-56 ரக துப்பாக்கிகள், ஒரு எம்-16 ரக துப்பாக்கி மற்றும் அதன் 4 மெகசின்களை இறக்குமதி செய்தமை மற்றும் வைத்திருந்தமை தொடர்பாகவும், இக்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தமைக்காகவும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், அவர்களைத் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பெறப்படவுள்ளதாக அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
