Mar 24, 2026 - 06:33 PM -
0
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இந்த ஆண்டிற்காக இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்டிருந்த 380 மில்லியன் டொலர் நிதியுதவியை 480 மில்லியன் டொலராக அதிகரிப்பதற்கும், நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதில் 200 மில்லியன் டொலரை உடனடியாக இலங்கைக்கு வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகாவா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர், இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்த போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி எவ்வாறான ஒத்துழைப்புகளை வழங்க முடியும் என்பது குறித்து இச்சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
டித்வா அனர்த்தத்திற்குப் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
அனர்த்தத்திற்குப் பிந்தைய நிலைமை மற்றும் தற்போதைய மத்திய கிழக்கு போர்ச் சூழலுக்கு மத்தியிலும் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களை ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் பாராட்டினார்.
டித்வா புயலினால் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய மலைநாட்டின் நீர் நிலைகளைப் பாதுகாப்பதன் மூலம் மீண்டும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் வங்கித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பில் தெற்காசிய பிராந்திய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சோனா சிரேஸ்தா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளும், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தொழிலாளர் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
