Apr 24, 2026 - 09:18 AM -
0
நடைபெறும் தேர்தலில் 5 மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெறும் சூழல் உள்ளதாக அதன் தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் உள்ள நிலவரம் மாறுபட்டது.
இருப்பினும், 5 மாநிலங்களிலும் பா.ஜனதாவுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதாக கருதுகிறேன். அசாம், புதுச்சேரி ஆகியவற்றில் எங்கள் அரசு நிச்சயமாக மீண்டும் அமையும். அதில் எந்த சந்தேகமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை பா.ஜனதாவுக்கு ஆதரவாக ஆச்சரியமளிக்கும் முடிவு வரப்போகிறது.
அங்கு பா.ஜனதா முதல்முறையாக ஆட்சி அமைக்கப்போவது 100 சதவீதம் உறுதி. மக்களின் மனநிலையை பார்த்தால், தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்கும்.
எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்று இப்போதே சொல்ல முடியாது. போகப்போக தெளிவான நிலை உருவாகும். தற்போதைய நிலவரத்தை பார்த்தால், நாங்கள் ஆட்சி அமைப்பது நிச்சயம். அதுபோல், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.
அங்கு நாங்கள் தலைமை கட்சி அல்ல. கூட்டணிக்கு அ.தி.மு.க தலைமை தாங்குகிறது.
ஆளும் தி.மு.க.வின் ஊழல், அராஜகம், சனாதன எதிர்ப்பு ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் மனநிலை காணப்படுகிறது.
களத்தை பார்த்தால், தி.மு.க.வுக்கு எதிரான அலை வீசுவது தெளிவாக தெரிகிறது. நான் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்த அனுபவத்தை வைத்து பார்த்தால், இத்தேர்தலில் தி.மு.க.வுக்கு கணிசமான பின்னடைவு ஏற்படும்.
விஜய் அரசியலுக்கு புதிதாக வந்துள்ளார். ஆனால் புதிதாக ஒருவர் வந்தவுடன் உடனடியாக பெரிய தாக்கத்தை உருவாக்க முடியாது. தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி மிக வலுவாக உள்ளது.
தேர்தலுக்கு பிறகு விஜய்யுடன் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் எழாது. விஜயுடன் கூட்டணி தேவையில்லை.
எங்கள் கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக போட்டியிட்டன. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி தனித்தே ஆட்சி அமைக்கும் என அவர் கூறினார்
