Jul 22, 2026 - 04:06 PM -
0
அவுஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு 9 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டேவிட் வார்னர், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு அணி தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், ஈஸ்டர் பண்டிகை அன்று, சிட்னியில் 3 கிளாஸ் வைன் குடித்து விட்டு டேவிட் வார்னர் காரை ஓட்டிச் சென்றார்.
போக்குவரத்து பொலிஸாரின் வழக்கமான சோதனையில் டேவிட் வார்னர், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகம் மது அருந்தியது உறுதியானது. இது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, டேவிட் வார்னர் மது அருந்தியதை ஒப்புக் கொண்டதாக அவரது வழக்கறிஞர் ஹில் குறிப்பிட்டார்.
மேலும் தனது செயல் முட்டாள்தனமானது என்றும், மது அருந்தி விட்டு வாடகை காரில் செல்லாமல் தானே வாகனத்தை ஓட்டிச் சென்றது தவறு எனவும் டேவிட் வார்னர் ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஆகஸ்ட் 18 ஆம் திகதி தண்டனை விவரங்களை அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, டேவிட் வார்னருக்கு 9 மாதங்கள் சிறைத்தண்டனையும், 6 மாதங்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு தடையும், இந்திய ரூபாய் மதிப்பில் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
