Jul 22, 2026 - 05:36 PM -
0
தமிழ்நாட்டில் மாணவர்களை பாடசாலை நோக்கி வரவழைக்கவும், மாணவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் கல்வியைக் கற்கவும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர், மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டை ஆண்ட அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் ஆகிய முன்னாள் முதலமைச்சர்கள் இந்தத் திட்டத்தை மேம்படுத்தி செயல்படுத்தி வந்தனர்.
இந்தச் சூழலில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தது. இதன்பிறகு, அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் திகதி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அறிமுகம் செய்து செயல்படுத்தினார்.
‘முதலமைச்சர் காலை உணவு திட்டம்’ எனும் பெயரில் செயல்படுத்தப்பட்டுவரும் இந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்து தந்தை பெரியாரின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என தற்போதைய முதலமைச்சர் அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது, ‘முதலமைச்சர் காலை உணவு திட்டம்’ எனும் பெயரை மாற்றி, ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
