Oct 15, 2026 - 12:45 PM

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயத்தில் சிறப்பு நிகழ்வு இன்று (15) சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் அ. கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நிகழ்வின் ஆரம்பத்தில், விருந்தினர்கள் பாண்ட் வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகளில், அப்துல் கலாமின் நினைவாக 96 மரக்கன்றுகள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி மரக்கன்றுகளை நாட்டி வைத்து நிகழ்வைச் சிறப்பித்தார்.
அப்துல் கலாமின் வாழ்க்கை, கல்வி மீதான அவரது அர்ப்பணிப்பு, அறிவியல் துறையில் அவர் படைத்த சாதனைகள் மற்றும் இளைய தலைமுறையினருக்கு அவர் வழங்கிய ஊக்கமளிக்கும் சிந்தனைகளை நினைவுகூரும் வகையில் மாணவர்களின் பேச்சு மற்றும் கவிதை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
கனவுகளைக் காண்பதுடன் அவற்றை நனவாக்குவதற்கான முயற்சிகளில் மாணவர்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்ற அப்துல் கலாமின் சிந்தனைகளை நினைவூட்டும் வகையில் இந்நிகழ்வுகள் அமைந்தன.
--



































