Oct 27, 2026 - 09:56 AM

வடக்கு மாகாண ஐயப்ப இந்து இணைவின் ஏற்பாட்டில், ஐயப்ப சுவாமியின் ஆன்மீக மகத்துவத்தையும் இந்து சமயத்தின் பண்பாட்டு மரபுகளையும் எடுத்துரைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஐயப்ப இந்து மாநாடு, நேற்று (26) யாழ்ப்பாணம் செல்வ மஹால் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்து சமயத்தின் ஆன்மீக விழுமியங்களைப் பேணிப் பாதுகாத்தல், பக்தி நெறியை வளர்த்தல், சமயப் பாரம்பரியங்களை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்தல் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் இறை வணக்கம், தேவாரம், தமிழ்மொழி வாழ்த்து, ஆசியுரைகள் மற்றும் கலை நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் சமயப் பெரியோர்கள், ஐயப்ப குருசுவாமிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்து சமயத்தின் ஆன்மீக மரபுகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் பேணிப் பாதுகாப்பதுடன், பக்தி உணர்வையும் சமூக நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் நோக்கில் இம்மாநாடு முன்னெடுக்கப்பட்டது.
--



































