Dec 24, 2025 - 11:33 AM -
0
'New Blueprint New Horizon' என்ற கருப்பொருளின் கீழ் சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்ட வரைபடத்தின் விழாவில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சீன மக்கள் குடியரசின் அபிவிருத்திச் சாதனைகளைப் பாராட்டினார்.
சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்ட வரைபடமான 'New Blueprint New Horizon' வெளியீட்டி நிகழ்வு இன்று (24) கொழும்பிலுள்ள ஷாங்க்ரிலா ஹோட்டலில் இடம்பெற்றது. சீனத் தூதரகத்தின் அழைப்பின் பேரிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இராஜதந்திர பிரதிநிதிகள் மற்றும் அரசியல்வாதிகள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.
சந்தை அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சியை சமூக ஜனநாயகக் கொள்கைகளுடன் சீனா எவ்வாறு வெற்றிகரமாக இணைத்துள்ளது என்பதை எடுத்துக்காட்டி, நீதி மற்றும் நியாயத்துடன் செல்வத்தை உருவாக்குவதை எவ்வாறு உறுதி செய்வது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தமதுரையில் எடுத்துக்காட்டினார்.
அவ்வாறே, வறுமை ஒழிப்பு, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் மாறிவரும் உலகளாவிய சவால்களுக்கு ஏற்ப அதன் ஈடுகொடுக்கும் இயைந்து போகும் ஆற்றல் ஆகியவற்றில் சீனா காட்டி வரும் வலுவான கவனத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு பாராட்டு தெரிவித்தார்.
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பு உலகளாவிய தெற்கின் கூட்டான குரலை மேம்படுத்துவதாக அமைவதோடு, இது சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார ஒழுங்கை மேலும் உள்ளடக்கியதாகவும் நியாயமானதாக்கவும் சீர்திருத்தவும் உதவுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.
சீனாவின் இந்த வெற்றிக்கும் இலங்கையுடனான அதன் நீண்டகால உறவுக்கும் வாழ்த்துத் தெரிவித்து,
'New Blueprint, New Horizon' திட்டம் சீன மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உலகளாவிய சௌஜன்யம் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு இது பங்களிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

