Jan 27, 2026 - 06:13 PM -
0
முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றான மாங்குளம் ஆதாரவைத்திய சாலையில் புனரமைக்கப்பட்ட தாதியர் விடுதி மற்றும் நோயாளர் காவு வண்டி தரிப்பிடம் மற்றும் சாரதி ஓய்வு அறை என்பன வடமாகாண ஆளுநரால் இன்று (27) காலை திறந்து வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் புனரமைக்கப்பட்ட விடுதிகளைப் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு இன்று வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.
வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், மாங்குளம் ஆதார வைத்தியசாலை வைத்தியர் விடுதி, தாதியர் விடுதி, துணை வைத்திய ஆளணியினர் விடுதி, சாரதி விடுதி மற்றும் நோயாளர் காவு வண்டித் தரிப்பிடம் என்பன புனரமைக்கப்பட்டு வருகின்றன.
இதில் முதற்கட்டமாக முழுமையாகப் புனரமைக்கப்பட்ட தாதியர் விடுதி, நோயாளர் காவு வண்டித் தரிப்பிடம் மற்றும் சாரதி விடுதி என்பன இன்று திறந்து வைக்கப்பட்டன. இதில் தாதியர் விடுதியானது 8 அறைகள், சமையலறை மற்றும் உணவு அருந்தும் அறை உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளது.
இலங்கை இராணுவத்தினரின் ஆதரவுடன் திருத்தப் பணிகள் இடம்பெற்ற இந்த தாதியர் விடுதி மற்றும் நோயாளர் காவு வண்டி தரிப்பிடம் மற்றும் சாரதி ஓய்வு அறை திறப்பு விழாவானது இன்று காலை 7.30 மணிக்கு மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வன்னிப் பிராந்தியக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதீப் குலதுங்க, வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ப.ஜெயராணி, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி சமன் பத்திரன, முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் உமாசங்கர், வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் காயன், வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-

