Feb 17, 2026 - 11:16 AM -
0
நாடளாவிய ரீதியில் இன்று (17) ஆரம்பமாகியுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு, மலையகப் பகுதி பாடசாலை மாணவர்கள் இறையாசி பெற்று ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்குச் செல்வதைக் காண முடிந்தது.
2025 (2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடு முழுவதும் 3,545 மத்திய நிலையங்களில் இன்று முதல் ஆரம்பமாவதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே குறிப்பிட்டுள்ளார்.
3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் காலநிலை சற்று சாரல் மழையுடன் மந்தமாக உள்ள போதிலும் ஹட்டன், நுவரெலியா, நானுஓயா போன்ற பகுதிகளில் மாணவர்கள் அறிவிக்கப்பட்ட நேரத்திற்குள் பரீட்சை மண்டபத்திற்கு சென்றதை காணக்கூடியதாக இருந்தது.
இதற்காக அரச பேருந்துக்கள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
-நுவரெலியா நிருபர் செ.திவாகரன்-

