Feb 21, 2026 - 05:11 PM -
0
சர்வதேச தாய்மொழி தினத்தினத்தினை முன்னிட்டு அனைத்து இன மக்களும் கலந்துகொண்ட உணவு கண்காட்சியொன்று இன்று (21) மட்டக்களப்பில் நடாத்தப்பட்டது.
உணவின் மொழி வழியாக உள்ளூர் உணவுகளின் மடைபரவல் என்னும் தொனிப்பொருளில் இந்த உணவு திருவிழா மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் கைத்தொழில் மற்றும் சமூக இணைப்பு மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் மட்டக்களப்பில் வாழும் அனைத்து இன மக்களின் பாரம்பரிய உணவுகளைக்கொண்டதாக இந்த கண்காட்சி அமைந்திருந்தது.
பேராசிரியர் சி.ஜெய்சங்கரின் ஒழுங்கமைப்பிலும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் அருளானந்தம் தலைமையிலும் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ப.பிரதீபன் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
மூத்தோர்களின் நினைவுகளிலிருந்தும் அவர்களின் அனுபவங்களிலிருந்தும் கைவிட்டுப்போன, அருந்தலாகிப்போன, மறைக்கப்பட்ட எமது முன்னோர்களின் உருவாக்கங்களான ஊட்டமான உணவுகளின் சுவையினை எமதாக்கிக்கொள்ளும் சுகநலவாழ்விற்கான பயணம் என்னும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
இதன்போது வேடுவசமூகத்தின் உணவுகள், இஸ்லாமிய மக்களின் உணவுகள், இந்து சமூகத்தின் உணவுகள், பறங்கிய சமூகத்தின் உணவுகள், சிங்கள சமூகத்தின் உணவுகள் என மட்டக்களப்பில் வசிக்கும் அனைத்து இனமக்களினதும் பண்டைய உணவுகள் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பெருமளவான பொதுமக்களும் மாணவர்களும் இந்த கண்காட்சிகளை பார்வையிட்டதுடன் உணவினையும் சுவைத்துச்சென்றதை காணமுடிந்தது.
-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

