Mar 24, 2026 - 11:13 AM -
0
வவுனியா பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் தொடர்கல்விக்கான நிலையத்தினால் நடாத்தப்பட்ட ஊடகக் கற்கைகள் மற்றும் இதழியல் உயர் சான்றிதழ் கற்கை நெறி மாணவர்களால் நேற்று (22) ஊடகி சஞ்சிகையானது வெளியிடும் நிகழ்வு வவுனியாப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
ஊடகக் கற்கைகள் மற்றும் இதழியல் உயர் சான்றிதழ் கற்கை நெறி மாணவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியாப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஸ்ர பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
விருந்தினர்கள் இணைந்து ஊடகி சஞ்சிகையினை வெளியிட்டு வைத்ததுடன், குறித்த சஞ்சிகையானது ஊடகக் கற்கைகள் மற்றும் இதழியல் உயர் சான்றிதழ் கற்கை நெறி மாணவர்களால் ஊடகி - இதழ் 1 என வெளியிடப்பட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சஞ்சிகையில் கவிதைகள், வன்னி தொடர்பான தகவல்கள், பட்டலந்த வதைமுகாம், ஊடகம் மற்றும் பெண்களின் ஒப்பீடு, வரலாற்று ஆய்வுகள், வடக்கு கடல்வளம் அழிவடைதல் தொடர்பான இலங்கை இந்திய அரச பார்வைகள், போதைப்பொருளால் ஏற்படும் சமூக சீர்கேடுகள், சர்வதேச அரசியலின் இராஜதந்திர வெளியுறவு கொள்கை மற்றும் தகவலறியும் உரிமைச்சட்டம் தொடர்பான தெளிவூட்டும் தகவல்கள் என பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊடகி சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வில் வவுனியா பல்கலைக்கழக ஒருங்கிணைந்த இலத்திரனியல் ஊடக அலகின் பணிப்பாளரும் சிரேஸ்ர விரிவுரையாளருமாகிய மதிவதனி சசிதரன், வருகைதரு விரிவுரையாளரும் பிசப் சவுந்தரம், ஊடக இயக்கத்தின் இயக்குநருமாகிய கலாநிதி ரூபன் மரியாம்பிள்ளை அடிகள், ஊடக விரிவுரையாளரும் மூத்த பத்திரிகையாளருமாகிய அ.நிக்ஸன், வவுனியாப் பல்கலைக்கழக நூலகர் S.சண்முகதாசன், வருகைதரு விரிவுரையாளர் ந.விமலச்சந்திரன், ஊடகவியலாளர்கள், ஊடகம் மற்றும் இதழியல் கற்கைதுறை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
--
