Mar 27, 2026 - 12:52 PM -
0
மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகத்தின் மூலம் மக்களிற்கு வினைத்திறனுடைய சேவையை வழங்குவதனை இலக்காக் கொண்டு 2026 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதேச செயலாளர் மாநாடு நேற்று (26) காலை 8.30 மணிக்கு துணுக்காய் பிரதேச செயலகத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
துணுக்காய் பிரதேச செயலகத்திற்கு வருகைதந்த மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் பிரதேச செயலகத்தின் சுற்றுப்புறச் சூழல் அலுவலக முறைமை என்பவற்றை முதலில் பார்வையிட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற பிரதேச செயலாளர் மாநாட்டில், கடந்த முறை நடைபெற்ற மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட பல்வேறு விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் முதலில் கலந்துரையாடப்பட்டதுடன் தற்போதய உலகளாவிய எரிபொருள் நெருக்கடி தொடர்பாக மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை செலவுக்கட்டுப்பாடுகள் தொர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகள், மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், பிரதேச செயலகங்களினூடாக மேற்க்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள், பொதுமக்கள் சேவைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அண்மையில் மாவட்டத்தில் ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் அது தொடர்பான பாதிப்புக்கள் அதற்கான நிவாரணங்கள் தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.
விசேடமாக அரசாங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள கிராமிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம் உட்பட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் சமூக நலத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
தொடர்ந்து பிரதேச செயலகங்களின் நிர்வாக , நிதி, திட்டமிடல் செயற்பாடுகள், முன்னேற்றங்கள், சவால்கள், சமூக நலச்சேவை செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள், இந்த வருடத்தில் செயற்படுத்த வேண்டிய திட்டங்கள், 2026 வரவு செலவுத் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு என்பன தொடர்பிலும் அதன் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் இனங்காணப்பட்டுள்ள அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இந்த மாநாட்டினை துணுக்காய் பிரதேச செயலாளர் இ.ரமேஸ் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தார். இந்த மாநாட்டில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.மஞ்சுளாதேவி (நிர்வாகம்), மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட நலன்புரி நன்மைகள் சபையின் மாவட்ட இணைப்பாளர், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு முதலான பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், உதவிப்பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், மற்றும் எனைய உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.
--
