May 1, 2026 - 03:31 PM -
0
தேசிய மக்கள் சக்தி, வடக்கு, கிழக்கு, தெற்கு எனப் பாகுபாடின்றி நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இன்று மே தினத்தைக் கொண்டாடி வருகின்றது. மட்டக்களப்பு வரலாற்றில் முதல் முறையாகத் தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் பறங்கியர் என அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நகரில் இம்மே தினத்தைக் கொண்டாடுவது ஒரு முக்கிய மைல்கல்லாகும் என தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி இன்று (01) கல்லடிப் பாலத்திலிருந்து காந்தி பூங்கா வரை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு, "இனவாதத்தையும் மதவாதத்தையும் தோற்கடிப்போம்" என முழக்கமிட்டனர். அங்கு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
"இது வெறும் மே தினம் மட்டுமல்ல, மதவாதத்திற்கும் இனவாதத்திற்கும் எதிராகப் போராடுகின்ற ஒரு நாளாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மேடையில் நிற்கின்ற நாம் மட்டுமல்ல, மக்கள் அனைவரும் இனம், மதம் கடந்து ஒன்றாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
2024 ஆம் ஆண்டு இந்த நாட்டை நாம் பொறுப்பேற்ற போது, நாடு பாரிய கடன் சுமையிலும் பொருளாதார நெருக்கடியிலும் சிக்கியிருந்தது. மக்கள் மண்ணெண்ணெய்க்காக வீதிகளில் வரிசையில் நின்றனர். விவசாயிகளுக்குப் பசளை இல்லை, நெல்லுக்கு உரிய விலை கிடைக்கவில்லை, அரச ஊழியர்களுக்குச் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை, மலையகத் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை.
இவ்வாறான சிக்கல்கள் நிறைந்த ஒரு நாடே எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்று எதிர்க்கட்சியில் இருந்தவர்கள், தேசிய மக்கள் சக்தியிடமோ அல்லது அநுர குமார திசாநாயக்க விடமோ ஆட்சியைக் கொடுக்காதீர்கள், ஆறு மாதங்களில் நாடு வீழ்ச்சியடைந்து மக்கள் பட்டினியால் இருக்க வேண்டும் என்று பயமுறுத்தினர். ஆனால், அந்த நிலைமையை மாற்றியமைக்க மக்கள் முன்வந்தனர்.
கடந்த 76 ஆண்டுகளாக இந்த நாட்டில் சரியான சட்டம் இருக்கவில்லை. கள்வர்களே ஆட்சி செய்தனர். மட்டக்களப்பில் கடந்த காலத்தில் இரண்டு சட்டங்கள் இருந்தன. அரசாங்கத்தின் சட்டத்திற்குப் பதிலாக 'பிள்ளையான் சட்டம்' தான் அமுலில் இருந்தது. விவசாயிகளிடம் கப்பம் வாங்கப்பட்டது, நிலங்கள் அபகரிக்கப்பட்டன, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம் கைப்பற்றப்பட்டது. நாம் வாழ வேண்டுமா இல்லையா என்பதை அவர்களே தீர்மானித்தனர்.
ஆனால் இன்று நாட்டில் இரு வேறு சட்டங்கள் இல்லை. யாராவது இப்போது மிரட்டுகிறார்களா? வடக்கு, கிழக்கு, தெற்கு என நாடு முழுவதும் ஒரே சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டியிருக்கிறோம். பொருளாதாரத்தை எம்மால் கட்டியெழுப்ப முடியாது எனப் பல கதைகளைச் சொன்னார்கள். ஆனால், இன்று நாம் கடன்களை மீளச் செலுத்தி நாட்டை முன்னோக்கி நகர்த்துகிறோம் என தெரிவித்தார்.
--
