May 28, 2026 - 11:00 AM -
0
உலக வாழ் இஸ்லாமியர்கள் இன்று (28) புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் நிலையில், மன்னார் மற்றும் மருதமுனை பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்களும் மிகுந்த பக்திபூர்வமாகக் கொண்டாடினர்.
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் காலை 6.30 மணியளவில் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.
அஷ்ஷெய்க் டி.எம். தஸ்னீம் மௌலவி தலைமையில் நடைபெற்ற இந்தத் தொழுகையைத் தொடர்ந்து, 'இறைத்தூதரின் தியாகம்' எனும் தலைப்பில் விசேட பெருநாள் பிரசங்கம் நிகழ்த்தப்பட்டது. தொழுகையின் பின்னர், மக்கள் ஒருவருக்கொருவர் தமது பெருநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகைகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல், மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று காலை நடைபெற்றது.
மருதமுனை இஸ்லாமிய பிரசார மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தத் தொழுகை மற்றும் குத்பா பிரசங்கத்தை, மருதமுனை தாறுல்ஹுதா மகளிர் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல்.எம். முபாறக் மதனி நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் ஆண்களும் பெண்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். குறிப்பாக, பெண்களுக்குப் பிரத்தியேகமான இட வசதிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
