Jul 2, 2026 - 10:37 AM -
0
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) 105 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட செய்தியொன்றை விடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் குறிப்பிடத்தக்க புதிய திருப்பம், உலகளாவிய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வல்லரசாக சீனா உருவெடுப்பதற்கு வழங்கிய பங்களிப்பைப் பாராட்டி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 105 ஆவது ஆண்டு நிறைவு விழாவை குறிக்கும் வகையில் இலங்கையில் அமைந்துள்ள சீன தூதகரத்தின் ஏற்பாட்டில் கொழும்பு சினமன் லைப் ஹோட்டலில் இடம்பெற்ற கொண்டாட்ட வரவேற்பு நிகழ்வில் நேற்று (01) இரவு கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
பொருளாதார சீர்திருத்தங்கள், நவீனமயமாக்கல், புத்தாக்கம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அதன் வளர்ச்சி மாதிரியானது சீனாவில் சமூக சமத்துவத்தையும் நீதியையும் ஊக்குவிப்பதுடன், இதன் மூலம் அனைவரும் பகிர்ந்துகொள்ளும் சுபீட்சத்தை அடைய முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், சீனாவின் வளர்ச்சி அனுபவங்களிலிருந்து, குறிப்பாக அதன் சீர்திருத்தங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதியான அர்ப்பணிப்பிலிருந்து ஒரு நாடாக இலங்கை கற்றுக்கொள்வதற்கு பல பெறுமதியான பாடங்கள் காணப்படுகின்றன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஆசியாவில் அமைதி, சகவாழ்வு மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இங்கு வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றத்தின் முக்கிய உந்துசக்திகளாக சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் தொடர்ந்து பலமான உறவு நீடிக்க வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தினார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நவீன பொருளாதார அணுகுமுறைக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளுக்கும் இடையிலான ஒற்றுமைகளை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சிக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் மேம்படுத்துவதற்கும் தனக்குள்ள அர்ப்பணிப்பை இங்கு மீண்டும் உறுதிப்படுத்தினார்.
