Aug 24, 2026 - 01:48 PM

யாழ்ப்பாணம், வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (24) காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
பிரதேச சபையின் நிதியில் 330 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த உள்ளக விளையாட்டு அரங்கு, வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் வகையில் அமையவுள்ளது.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி. பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானம், பொதுச் செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். சுகிர்தன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
அத்துடன், யாழ்ப்பாண மாநகர முதல்வர், வடக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்திலேயே இந்த பாரிய விளையாட்டு உட்கட்டமைப்பு நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு நவீன வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், பிரதேச மட்டத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான முக்கிய உட்கட்டமைப்பு திட்டமாகவும் இந்த உள்ளக விளையாட்டு அரங்கு அமையவுள்ளது.
--





















