Sep 23, 2026 - 01:56 PM

நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளைச் சந்தித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை, தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் செயற்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் தற்போதைய நீடிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டிற்கு அப்பால் நாட்டின் பொருளாதார தொலைநோக்கு பார்வை குறித்து கலந்துரையாடுவதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
நாட்டின் வெளிப்புற சூழல், அந்நிய செலாவணி கையிருப்பு, கடனின் நிலைத்தன்மை, நிதி நிலைமை, பொருளாதார வளர்ச்சி மற்றும் தற்போதைய நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்திற்கு அப்பால் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு இலங்கைக்குத் தேவையான நிபந்தனைகள் உட்பட, 2027 மார்ச் மாதத்திற்குப் பின்னரான இலங்கையின் பொருளாதார மீளெழும் திறன் குறித்து இச்சந்திப்பில் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.
நிலையான கடன் கொள்கைகள் மற்றும் அரச நிதி நிலைமை, நிர்வகிக்கக்கூடிய வெளிப்புற நிதித் தேவைகள் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான மேம்பட்ட எதிர்பார்ப்புகள் உட்பட, தற்போதைய திட்டத்தின் இறுதியில் இலங்கை அடைய வேண்டிய அளவிடக்கூடிய பொருளாதார நிலைகள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அரச நிதியை ஒருங்கிணைத்தல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புகள் காரணமாக உழைக்கும் மக்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் மீது விகிதாசாரமற்ற சுமை சுமத்தப்படக் கூடாது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச IMF பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினார்.
மேலும், பேரினப் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிதி ஒழுக்கத்தைப் பேணுகின்ற அதேவேளையில், குடும்பங்கள் மற்றும் நுண், சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாண்மைகள் எதிர்கொள்ளும் உண்மையான பொருளாதார நிலைமைகள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடனான பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தை ஒட்டுமொத்த பேரினப் பொருளாதாரக் குறிகாட்டிகள் மூலம் மாத்திரம் மதிப்பீடு செய்யாமல், குடும்பங்கள், தனிநபர்கள் மற்றும் வணிக மட்டத்தில் அதன் தாக்கம் மூலமாகவும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
வறுமை, பொருட்களின் நியாயமான விலை, பணவீக்கம் மற்றும் குடும்ப வருமானம், குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார அழுத்தங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தும், மக்கள் நலனை முதன்மையாகக் கொண்ட அணுகுமுறையின் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வலியுறுத்தினார்.
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பிறகு, அதிக முதலீடுகள், வேலை வாய்ப்புகள், மேம்பட்ட குடும்ப வருமானம் மற்றும் மக்களுக்கு வலுவான பொருளாதார பாதுகாப்பை உறுதிசெய்து, நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை நோக்கி நாடு நகர வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் IMF உறுப்பினர்களிடம் வலியுறுத்தினார்.
எதிர்கால வெளிப்புற அதிர்ச்சிகளைத் தாங்கும் இலங்கையின் திறனை வலுப்படுத்தும் அதே வேளையில், பேரினப் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணக்கூடிய நம்பகமான பொருளாதார கட்டமைப்பை 2027 மார்ச் மாதத்திற்கு அப்பால் உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட முக்கிய அம்சங்கள்,
அனைத்து முழுமையான பொருளாதாரக் குறிகாட்டிகளுக்கு அப்பால் சென்று வறுமை, மலிவு விலை, குடும்ப வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட குடும்பங்கள், தனிநபர்கள் மற்றும் வணிக மட்டங்களில் அவற்றின் தாக்கத்தை மதிப்பீடு செய்வதன் அவசியம்.
கடன் தொடர்பான சிரமங்கள் மற்றும் தொழில்முனைவு மற்றும் உற்பத்தித் திறனுக்கான பரந்த விளைவுகள் உட்பட நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாண்மைகள் எதிர்கொள்ளும் பொருளாதார அழுத்தங்கள்.
அரச நிதி ஒருங்கிணைப்பு மற்றும் வரிவிதிப்பு என்பன உழைக்கும் மக்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் மீது விகிதாசாரமற்ற சுமையை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதன் முக்கியத்துவம்.
சான்றுகள் அடிப்படையிலான கொள்கைக்கு ஆதரவளிப்பதற்கும், பொருளாதார சீரமைப்புகளின் பகிர்வு தாக்கங்களை மதிப்பீடு செய்வதற்கும் நம்பகமான, நேரடியான குடும்ப மட்ட மற்றும் வறுமை தொடர்பான தரவுகளின் அவசியம்.
முழுமையான பொருளாதார ஸ்திரத்தன்மையானது மக்களின் வாழ்க்கை, வறுமை ஒழிப்பு, பொருட்களின் மலிவு விலை, குடும்ப வருமானம் மற்றும் உழைக்கும் மக்களின் பொருளாதார பாதுகாப்பு ஆகியவற்றில் அளவிடக்கூடிய முன்னேற்றமாக மாற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ச்சியான நிதித் திட்டம் எதுவுமின்றி இலங்கையால் தற்போதைய EFF ஏற்பாட்டிற்கு அப்பால் வெற்றிகரமாக மாற முடியுமா என்பதைத் தீர்மானிக்கும் பொருளாதார நிலைமைகள் மற்றும் அளவிடக்கூடிய குறிகாட்டிகள், மற்றும் தொடர்ச்சியான IMF நிதியுதவியைக் கருத்தில் கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெளிவுபடுத்துமாறு கோரினார்.
நீட்டிக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் பின்னணியிலேயே இச்சந்திப்பு நடைபெற்றது. அறிவிக்கப்பட்ட திட்ட அட்டவணையின்படி, 7 ஆவது மீளாய்வு 2026 அக்டோபரிலும், 2026 டிசம்பர் இறுதி செயல்திறனின் அடிப்படையில் 8 ஆவது மீளாய்வு 2027 மார்ச்சிலும் திட்டமிடப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி Evan Papageorgiou (Mission Chief), Enrique Flores Curiel, Dinar Prihardini, Ursula Wiriadinata, Ozlem Aydin, Yorbol Yakhshilikov, Klakow Akepanidtaworn, Yan Chen, Martha Woldemichael (Resident Representative) மற்றும் Manavee Abeyawickrama ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, ஹர்ஷன ராஜகருணா, கபீர் ஹாஷிம், ஹெக்டர் அப்புஹாமி, அஜித் பி. பெரேரா, முஜிபுர் ரஹ்மான், பேராசிரியர் பிரசன்ன பெரேரா, தலல் ரபி, குசும் விஜேத்திலக்க, திலும் அழகியவன்ன மற்றும் சுரங்க ரணசிங்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



























