Sep 30, 2026 - 10:02 AM

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த கலைஞர்கள், அறிஞர்கள் மற்றும் அறிவாளிகள் ஒன்றிணைந்து தமது கலைத்திறன்களையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வடமாகாண கலை விழா, எமது கலை மற்றும் பண்பாட்டு மரபுகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முக்கியமான நிகழ்வாக அமைந்துள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கு மாகாண பண்பாட்டு விழா – 2026 நேற்று (29) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
வடக்கு மாகாணத்தின் பண்பாட்டு பல்வகைமையையும் பாரம்பரியக் கலை மரபுகளையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, யாழ்ப்பாணம் முற்றவெளி சுற்றுவட்டாரத்திலிருந்து ஆரம்பமான பண்பாட்டு பேரணியுடன் தொடங்கியது. பல்வேறு பாரம்பரியக் கலைநிகழ்வுகளை வெளிப்படுத்திய 32 பண்பாட்டு நடனக் குழுக்களும் 22 பண்பாட்டு ஊர்திகளும் விருந்தினர்களுடன் யாழ்ப்பாண நகர வீதிகளூடாக அணிவகுத்து திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை சென்றடைந்ததைத் தொடர்ந்து பிரதான நிகழ்வுகள் ஆரம்பமாகின.
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த பல்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் மொழிகளைப் பின்பற்றும் மக்களின் பண்பாடுகளையும் கலை மரபுகளையும் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு பண்பாட்டு நடனங்கள் இடம்பெற்றதுடன், தத்தமது தனித்துவமான பண்பாடுகளைப் பாதுகாத்தவாறு வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து தமது கலை மரபுகளை வெளிப்படுத்தியமை நிகழ்வின் முக்கிய அம்சமாக அமைந்தது.
பண்பாட்டு விழாவின் ஒரு பகுதியாக நூல் வெளியீடு, கலைஞர்கள் கௌரவிப்பு மற்றும் பல்வேறு பண்பாட்டு நடன நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், கலைத்துறையைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பை மதிப்பளிக்கும் வகையில் விருதுகளும் கௌரவிப்புகளும் வழங்கப்பட்டன. இளம் கலைஞர்களின் பங்கேற்பும் நிகழ்வில் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், கூட்டுறவுத்துறை பிரதியமைச்சரும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோர் பங்கேற்றனர். வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிறஞ்சன், பண்பாட்டலுவல்கள் அலகின் உதவிப் பணிப்பாளர் நி. தர்சினி உள்ளிட்ட அதிகாரிகள், கலைஞர்கள், கலைமன்றங்களின் பிரதிநிதிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், கலை மற்றும் பண்பாட்டுத் துறைகள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்த போதிலும், எமது கலை மரபுகள் இன்றும் உயிர்ப்புடன் நிலைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றன. கலை என்பது வெறுமனே பொழுதுபோக்குக்கான ஒரு துறையல்ல என்பதுடன், சாதி, மதம், பிரதேசம் உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்து மனிதர்களை ஒன்றிணைக்கும் வலிமையான ஊடகமாகவும் விளங்குகின்றன.
இந்தியாவில் நடைபெற்ற புலம்பெயர் சமூகத்தினருக்கான மாநாட்டில் தாம் பெற்ற அனுபவத்தை நினைவுகூர்ந்த அமைச்சர், பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்கள் கலை மற்றும் பண்பாட்டின் ஊடாக தமது அடையாளத்தை வெளிப்படுத்தி ஒன்றிணைவதை அவதானிக்க முடிந்ததாகக் குறிப்பிட்டதுடன், இலங்கையிலும் தீபாவளி, புத்தாண்டு, வெசாக், கிறிஸ்மஸ் உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகளைக் கொண்டாடும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் ஏனைய சமூகங்கள் தங்களது தனித்துவங்களைப் பேணியபடியே ‘இலங்கையர்’ என்ற பொதுவான அடையாளத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.
தேசிய ஒற்றுமையையும் இன நல்லிணக்கத்தையும் வலுப்படுத்துவதில் கலை மற்றும் பண்பாட்டுத் துறைகளுக்கு முக்கியமான பங்கு இருப்பதுடன், இதன் அடிப்படையிலேயே அரசாங்கத்தின் சார்பில் பல்வேறு கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ் இலக்கியம், இலக்கணம், மொழியியல், தத்துவம் மற்றும் சமூக வாசிப்பு ஆகிய துறைகளில் ஆழமான பங்களிப்பை வழங்கிய பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் பன்முக ஆளுமையும் அறிவுலகப் பங்களிப்பும் நினைவுகூரப்பட்டதுடன், அவருக்கு மதிப்பளிக்கும் வகையில் இவ்விழாவில் ‘பேராசிரியர் கா. சிவத்தம்பி அரங்கு’ அமைக்கப்பட்டிருப்பது அவரது அறிவுப் பணிக்கான பொருத்தமான அங்கீகாரமாக அமைந்துள்ளது.
யாழ்ப்பாணம் வரலாற்று ரீதியாக மாற்றுக்கருத்துக்களும் அறிவுசார் சிந்தனைகளும் உருவான மண்ணாக விளங்கியதுடன், அபாரமான புத்திஜீவிகளையும் அறிஞர்களையும் உருவாக்கிய பெருமையையும் கொண்டுள்ளது. அலெக்ஸ் ஹேலியின் ‘வேர்கள்’ என்ற படைப்பை நினைவுகூரும் வகையில், ஒரு சமூகத்தின் அடையாளம் அதன் வேர்களிலேயே தங்கியிருப்பதாகவும், கலை, இலக்கியம், மொழி மற்றும் கல்வி ஆகியவை எமது சமூகத்தின் முக்கியமான அடையாள வேர்களாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். காலப்போக்கில் இந்த வேர்கள் பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கு மீண்டும் நீரூற்றி வளர்த்தெடுத்து வலுப்படுத்த வேண்டிய பொறுப்பு தற்போதைய தலைமுறைக்கு உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இன்றைய இளைய தலைமுறையினரிடையே காணப்படும் கலை ஆற்றல்களையும், அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களின் பங்களிப்பையும் பார்க்கும்போது, யாழ்ப்பாணம் மீண்டும் ‘மாற்றுக்கருத்துக்களின் ஊற்றாக’ துளிர்விடுவதற்கான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கலை, இலக்கியம் மற்றும் கல்வித் துறைகளின் வளர்ச்சியின் ஊடாக அறிவுசார் சமூகத்தை கட்டியெழுப்பி, அதன் மூலம் நாட்டையும் சமூகத்தையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.
ஒரு நாடு பொருளாதார ரீதியாக மட்டும் வளர்ச்சியடைவது போதுமானதல்ல என்பதுடன், கலை, இலக்கியம், கல்வி, அறிவியல் மற்றும் பண்பாடு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். இத்தகைய முழுமையான வளர்ச்சிக்கு சரியான அரசியல் செயற்பாடுகளும் தொலைநோக்கான வழிகாட்டலும் அவசியமாகும்.
இலங்கையின் எதிர்கால வளர்ச்சி தமிழ், சிங்கள, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து செயற்படுவதிலேயே தங்கியுள்ளது என்பதுடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் பரஸ்பர புரிந்துணர்வும் இல்லாமல் நாட்டின் நிலையான முன்னேற்றத்தை அடைய முடியாது. இதனடிப்படையில், கலை மற்றும் பண்பாட்டை சமூகங்களை இணைக்கும் பாலமாகப் பயன்படுத்தி, அனைத்து மக்களையும் ஒரே தேசிய நோக்கத்தின் கீழ் ஒன்றிணைக்கும் முயற்சிகள் தொடரப்பட வேண்டும் என்பதுடன், வடமாகாணத்தின் கலைஞர்கள், அறிஞர்கள் மற்றும் அறிவுசார் சமூகத்தினரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் இவ்விழா, கடந்த காலத்தின் கலை மற்றும் அறிவுசார் மரபுகளை நினைவுகூர்வதற்கான நிகழ்வாக மட்டுமன்றி, எதிர்கால தலைமுறைக்கான புதிய பண்பாட்டு மற்றும் அறிவுசார் பாதையை உருவாக்கும் முக்கியமான தளமாகவும் அமைய வேண்டும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.



























