Sep 30, 2026 - 11:55 AM

பதுளை மாவட்டம், ஊவா பரணகம பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அலகொல்லை தோட்டத்தில் 51 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (29) நடைபெற்றது.
'வளமான நாடு – அழகான வாழ்க்கை' என்ற அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை யதார்த்தமாக்கும் வகையில், இந்திய அரசாங்கத்தின் உதவியுடனும் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடனும் இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்திய வீட்டுத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 10,000 வீடுகள் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே அலகொல்லை தோட்டத்தில் 51 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ரவீந்திர பண்டார, அம்பிகா சாமுவேல், இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் சரண்யா உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இப் புதிய வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவுபெறுவதன் மூலம், அலகொல்லை தோட்டத்தில் வாழும் 51 குடும்பங்களின் நீண்டகால வீட்டுத் தேவைக்குத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
--



























