Oct 8, 2026 - 01:54 PM

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், பட்டிருப்புத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் சி.மூ. இராசமாணிக்கம் அவர்களின் சிராத்த தினம் நேற்று (07) அனுஷ்டிக்கப்பட்டது.
மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மே. வினோராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில், முதற்கட்டமாக அமரர் சி.மூ. இராசமாணிக்கம் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த அமரர் சி.மூ. இராசமாணிக்கம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தி நினைவு கூரப்பட்டது.
தமிழ் மக்களின் உரிமை, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் சமூக நலனுக்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்த அமரர் சி.மூ. இராசமாணிக்கம் அவர்களின் அரசியல் பங்களிப்பும், மக்கள் பணியும், தமிழினத்தின் உரிமைக்கான அவரது அர்ப்பணிப்பும் இந்நிகழ்வில் நினைவுகூரப்பட்டன.
தவிசாளர் கருத்து தெரிவிக்கும் போது,
சி.மூ.இராசமாணிக்கம் ஐயாவின் அரசியல் பயணமும் மக்கள் சேவையும் எதிர்கால தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதுடன், தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் அவர் பதித்த தடங்கள் என்றும் அழியாதவை என தெரிவித்தார்.





































