Oct 12, 2026 - 10:34 PM

சர்வதேச நாணய நிதிய (IMF) தற்போதைய திட்டம் நிறைவடைந்தவுடன் மற்றொரு புதிய சர்வதேச நாணய நிதிய திட்டத்தில் இணைந்துகொள்வதை இலங்கை முழுமையாக நிராகரிக்கவில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் இன்னும் 6 மாத கால இடைவௌி உள்ள நிலையில், அரசாங்கம் இதுவரை எவ்வித இறுதி முடிவையும் எடுக்கவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, 2026 இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாட்டில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் கீழ் எட்டப்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்து, அதேவேளை பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்ட புதிய உடன்படிக்கைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
எனினும் அந்நியச் செலாவணி கையிருப்பு இன்னும் எதிர்பார்க்கப்பட்ட நிலையை அடைய வேண்டுமென்பதும் நாட்டின் கடன் தர நிலைகளில் மேலதிக முன்னேற்றங்கள் அவசியமென்பதும் குறிப்பிடத்தக்க விடயமாக பார்க்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதிலேயே தற்போதைய சர்வதேச நாணய நிதிய திட்டம் பெரும்பாலும் கவனம் செலுத்தியுள்ளது.
அடுத்த கட்டம் அந்த ஸ்திரத்தன்மைக்குக் குந்தகம் விளைவிக்காமல் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை ஆதரிக்கும் ஒரு புரிந்துகொள்ளலை எட்ட முடிந்தால், சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கும் என அவர் கூறினார்.
சாத்தியமான எதிர்கால சர்வதேச நாணய நிதிய திட்டம் எந்த வடிவத்தை எடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி உள்ளிட்ட சிரேஷ்ட அரசாங்க பொருளாதார அதிகாரிகளிடையே கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் ஜனாதிபதி வெளிப்படுத்தினார்.
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்துடனான ஈடுபாட்டிலிருந்து முழுமையாக விலகுவதற்கோ அல்லது மற்றொரு திட்டத்திற்கு உறுதியளிப்பதற்கோ அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை.
இலங்கையின் பொருளாதார நிலை, அதன் வெளிநாட்டு கையிருப்பின் பலம் மற்றும் சாத்தியமான வெளிப்புற பொருளாதார அதிர்ச்சிகளின் தாக்கம் ஆகியவற்றைப் பொறுத்தே ஒரு முடிவு எடுக்கப்படும் என ஜனாதிபதி கூறினார்.
மத்திய கிழக்கு மோதலின் தாக்கத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதைய போக்கு தொடர்ந்தால், 2025 ஆம் ஆண்டில் சுமார் 4.4 பில்லியன் டொலர்களாக இருந்த இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 2026 ஆம் ஆண்டில் சுமார் 6 பில்லியன் டொலர்களை எட்டக்கூடும் என எச்சரித்தார்.
இது போன்ற நிகழ்வுகள் பொருளாதாரத்திற்கு முன்னால் உள்ள நிச்சயமற்ற தன்மையையும், மேலதிக வெளிப்புற அழுத்தங்களை இலங்கையால் தாங்க முடியுமா என்பதை மதிப்பிடுவதற்கான அவசியத்தையும் வெளிப்படுத்துகின்றன என்றார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் இணக்கப்பாட்டை பாதுகாப்பதுடன், நிர்வாகத்தின் பொருளாதார இலக்குகளுக்கும் ஏற்கனவே உள்ள திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட உறுதிமொழிகளுக்கும் இடையில் ஒப்பீட்டளவில் மிகக் குறைவான முரண்பாடுகளே இருந்தன என்றார்.
இது பெரிய கருத்து வேறுபாடுகள் இன்றி திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த அரசாங்கத்திற்கு அனுமதி அளித்துள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.






























