Oct 19, 2026 - 10:10 AM
By மலையக நிருபர் சுந்தரலிங்கம்
By மலையக நிருபர் சுந்தரலிங்கம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.
குறிப்பாக, நேற்று (18) மாலை பெய்த கடும் மழையினால் நானுஓயா – ரதல்ல பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பல வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியதுடன், பொதுப் போக்குவரத்தும் பல மணிநேரம் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நானுஓயா – கெல்சி பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, அப்பகுதியில் அமைந்துள்ள ஆலயம், வீதிகள் மற்றும் குடியிருப்புகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் தோட்டத் தொழிலாளர்களின் உடைமைகளும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையினால் மேலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
எனவே, வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
































