Oct 23, 2026 - 10:19 PM

சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த பிணை விண்ணப்பத்தை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரம இன்று (23) நிராகரித்தார்.
இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான ஜானகி சிறிவர்தன ஆகியோர் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய கிரிஷ் கொடுக்கல் வாங்கலின் போது 70 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி சிறிவர்தன உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு நடவடிக்கைகள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (23) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ எம்.பி. மற்றும் சந்தேகநபரான ஜானகி சிறிவர்தன ஆகியோரை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலான சட்டத்தரணிகள் குழு தாக்கல் செய்திருந்த பிணை கோரிக்கை மீதான உத்தரவை நீதவான் இதன்போது பிரகடனப்படுத்தினார்:
"சந்தேகநபர் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட பிணை விண்ணப்பத்தில் அவர் சார்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய நிலைப்பாடு என்னவெனில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தால் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149 ஆம் பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட சான்றிதழ் செல்லுபடியாகாது என்பதாகும். ஆனால், நீதிமன்றம் அதனை நிராகரிக்கிறது. அதற்கமைய, நீதிமன்றம் அச்சான்றிதழை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலையில் சந்தேகநபருக்கு பிணை வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக இருந்தால் விசேட காரணங்கள் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் சந்தேகநபர் சார்பில் முன்வைக்கப்பட்ட பெரும்பாலான விடயங்கள் சட்டப்பூர்வ நிலைப்பாடுகளே தவிர, பிணை வழங்குவதற்கான விசேட காரணங்கள் அல்ல. எனவே சந்தேகநபரின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது." என்றார்.
அதனைத் தொடர்ந்து, விசாரணை தொடர்பான மேலதிக அறிக்கையைச் சமர்ப்பித்த இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகள், சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல் இடம்பெற்ற காலத்தில் கிரிஷ் நிறுவனத்தின் பணிப்பாளராக பணியாற்றிய அஸ்சர்யா சோனி என்பவரை இவ்வழக்கின் 5 ஆம் சந்தேகநநபராகப் பெயரிடுவதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்:
"கனம் நீதியரசர் அவர்களே, சர்ச்சைக்குரிய 70 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்கும் நடவடிக்கை 03 சந்தர்ப்பங்களில் இடம்பெற்றுள்ளது. அந்த சந்தர்ப்பங்களில் இந்த சந்தேகநபரும் கிரிஷ் நிறுவனத்தின் பணிப்பாளராக இருந்துள்ளார். மேலதிக விசாரணைகளின் போது பல வங்கி அறிக்கைகள் மூலம் அது வெளிப்பட்டது. இது தவிர, கிரிஷ் நிறுவனத்தின் அன்றைய ஊழியர்கள் சிலரிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளோம். இதற்கு முன்னர் மிகவும் பயத்துடன் கருத்துக்களை தெரிவிக்கவும் வாக்குமூலங்களை வழங்கவும் தயங்கிய சாட்சிகள், தற்போது இச்சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், அச்சமின்றி விரிவான வாக்குமூலங்களை வழங்கியுள்ளதுடன் பல ஆவணங்களையும் புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். தற்போது சர்ச்சைக்குரிய கிரிஷ் நிறுவனம் கலைக்கப்பட்டுள்ளது. இந்த இலஞ்சப் பணத்தைப் பெற்றதாகக் கூறப்படும் நான்காவது சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷ, சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல் காலத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் கடிதமொன்றின் கையெழுத்தை, அவர் சமீபகாலமாக பாராளுமன்றத்திற்கு வழங்கிய ஆவணங்களிலுள்ள கையெழுத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் எதிர்பார்க்கின்றோம்." என்றார்.
அதனைத் தொடர்ந்து, சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சுருக்கமான வாதத்தை முன்வைத்தார்.
"கனம் நீதியரசர் அவர்களே, இது அநீதியானது. சிலருக்கு இலஞ்ச விசாரணை ஆணைக்குழு நேரடியாக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது. சிலருக்கு ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149 ஆம் பிரிவின் கீழ் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் சான்றிதழைத் தாக்கல் செய்து ரிமாண்ட் செய்கிறது. இது அரசியல் நோக்கத்துடன் இடம்பெறும் ஒரு செயல்பாடாகும் கனம் நீதியரசர் அவர்களே." என்றார்
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரம, வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 06 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், அதுவரை சந்தேகநபர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
































