Oct 24, 2026 - 12:00 PM

இங்கிலாந்து அணிக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியினைத் தொடர்ந்து, ஐசிசி ஆண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசையில் இலங்கை அணி 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதன்மூலம் இங்கிலாந்து அணியை இலங்கை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
ஐசிசி தரவரிசையின்படி, இலங்கை அணி 41 போட்டிகளில் விளையாடி 3,896 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், 95 மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் 6வது இடத்தைப் பிடித்துள்ளதாக நேற்று (23) வெளியிடப்பட்ட புதிய தரவரிசைப் பட்டியல் உறுதிப்படுத்துகிறது.
முன்னதாக கடந்த 18 ஆம் திகதி வெளியிடப்பட்ட தரவரிசையில் இலங்கை 7 ஆவது இடத்திலும் இங்கிலாந்து 6 ஆவது இடத்திலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய தரவரிசை நிலவரப்படி, ஆப்கானிஸ்தான் அணி 94 மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளதுடன், இங்கிலாந்து அணி 93 மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் 8வது இடத்திற்கும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, 115 மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் தொடர்வதுடன், நியூசிலாந்து (109), தென்னாப்பிரிக்கா (104), பாகிஸ்தான் (103) மற்றும் அவுஸ்திரேலியா (102) ஆகிய அணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன.
ராவல்பிண்டியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், 430 என்ற இமாலய இலக்கை இலங்கை அணி வெற்றிகரமாகத் துரத்திப்பிடித்தது.
ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பதிவான இரண்டாவது மிகப்பெரிய வெற்றிகரமான இலக்குத் துரத்தல் இதுவாகும் என்பதுடன், இந்தச் சிறப்பான வெற்றியே இலங்கை அணியின் தரவரிசை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
































