Oct 24, 2026 - 04:17 PM

கைத்துப்பாக்கிகள் (Pistols) என சந்தேகிக்கப்படும் 2 துப்பாக்கிகள் மற்றும் 12-போர் (12-bore) ரக தோட்டாக்கள் உள்ளிட்ட பல ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கேகாலை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (23) மாவனெல்லையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நபர் ஒருவரிடம் துப்பாக்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பிரிவினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போதே இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மாவனெல்லை, முருதவெல, கிரிகல சந்திப் பகுதியைச் சேர்ந்த முகமது தவ்பீக் மொஹமட் அஸ்கி என்பவராவார். அவர் தனது வீட்டில் இருந்த போதே இந்த ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து அடையாளம் தெரியாத 2 கைத்துப்பாக்கிகள், 5 மெகசின்கள் (Magazines), 156 ஈயக் குண்டுகள், 12-போர் துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 20 தோட்டாக்கள், மற்றும் 47 கிராமும் 360 மில்லிகிராமும் கொண்ட ஈயத் துண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், 12-போர் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் மரப் பிடி (Wooden butt) ஒன்று, 5 அங்குல நீளமுள்ள கூர்மையான கத்தி ஒன்று மற்றும் ஐபோன் 13 ரக கைபேசி ஒன்றையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஆயுதங்களுடன் மாவனெல்லை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
































