Oct 26, 2026 - 03:59 PM

வங்களா விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கம் காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் இன்று (26) அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஓடைகளும் ஆறுகளும் பெருக்கெடுத்து, நீர் கரைபுரண்டு ஓடுகின்றன.
குறிப்பாக, நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் நீர்த்தேத்திற்குக் கீழ் கொத்மலை ஓயாவை அண்மித்து வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு நீர்த்தேக்கப் பொறுப்புப் பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா வீதிகளின் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, கடும் மழையுடன் பனிமூட்டமும் காணப்படுவதால், இவ்வீதிகளையும் பயன்படுத்தும் வாகனச் சாரதிகள் மிகவும் அவதானமாகப் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலும் நேற்று (25) முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இன்று பிற்பகல் முதல் சாதாரண மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள போதிலும், தொடர் மழையின் காரணமாகக் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் பாடசாலை மாணவர்கள், விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் விவசாயிகள் மற்றும் தமது நாளாந்தச் செயற்பாடுகளை முன்னெடுப்போர் எனப் பலரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
































