Oct 28, 2026 - 11:07 AM

இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் முதல்தரக் கிரிக்கெட் தொடரான ராஞ்சிக் கிண்ணத் (Ranji Trophy) தொடரில், பரோடா அணிக்காக விளையாடி வரும் 21 வயது இளம் வீரர் பிரியான்ஷு மொலியா (Priyanshu Moliya) ஆட்டமிழக்காமல் 321 ஓட்டங்களை குவித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
2026-27 ராஞ்சிக் கிண்ணத் தொடரின் ஒரு பகுதியாக பரோடா மற்றும் ஜம்மு-காஷ்மீர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பரோடா அணி 616 ஓட்டங்களை குவித்தது. இதில் மூன்றாம் இலக்க வீரராகக் களமிறங்கிய பிரியான்ஷு மொலியா, 36 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 321 ஓட்டங்களை பெற்றார்.
கடந்த 1947 ஆம் ஆண்டு குல் மொஹமட் (Gul Mohammed) என்பவரால் பதிவு செய்யப்பட்ட 319 ஓட்டங்கள் என்ற 69 ஆண்டுகால சாதனையை முறியடித்த பிரியான்ஷு மொலியா, ராஞ்சிக் கிண்ண வரலாற்றில் பரோடா அணிக்காக அதிகபட்ச தனிநபர் ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.
அதேநேரம், குஜராத் மாநிலக் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் வரிசையில் சமித் கோஹெல் (359), சத்தேஸ்வர் புஜாரா (352) மற்றும் ரவீந்திர ஜடேஜா (331) ஆகியோருக்கு அடுத்தபடியாக 4 ஆம் இடத்தை மொலியா பிடித்துள்ளார் என பரோடா கிரிக்கெட் சங்க புள்ளிவிவர நிபுணர் காந்தி சுதர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரியான்ஷு மொலியாவின் தந்தை சுரேஷ், தனது மகனின் கிரிக்கெட் கனவுக்காக ராஜ்கோட்டிலிருந்து வதோதராவுக்குக் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். அங்கு 'மொகிந்தர் லாலா அமர்நாத்' கிரிக்கெட் அகாடமியில் இணைந்த பிரியான்ஷு, 1983 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த மொஹிந்தர் அமர்நாத்தின் வழிகாட்டலின் கீழ் தனது ஆட்டத்தை மெருகேற்றிக்கொண்டார்.
அந்த அகாடமியில் அடுத்தடுத்த பருவகாலங்களில் (Seasons) முறையே 1,100 மற்றும் 1,500 ஓட்டங்களை குவித்து அவர் தனது திறமையை நிரூபித்திருந்தார்.
தனது வளர்ச்சி குறித்துப் பேசிய பிரியான்ஷு மொலியா, "எனது ஆரம்பக் கட்ட கிரிக்கெட் வாழ்க்கைக்கு மொஹிந்தர் அமர்நாத் சேர் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். அவர் பரோடாவுக்கு வரும்போதெல்லாம் அகாடமிக்கு வந்து எனக்கு ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் வழங்குவார். எனினும், கொவிட்-19 காரணமாக அந்த அகாடமி மூடப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனது கள உத்தி குறித்துக் குறிப்பிடுகையில், "எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்காமல், ஒவ்வொரு பந்தையும் தனித்தனியாக எதிர்கொண்டு விளையாடுவதிலேயே நான் முழுக் கவனம் செலுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் (BCCI) ஆண்டுதோறும் நடத்தப்படும் மிக முக்கிய முதல்தரக் (First-Class) துடுப்பாட்டத் தொடரே 'ராஞ்சிக் கிண்ணத் தொடர்' ஆகும். சர்வதேசக் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்கேற்ற முதல் இந்திய வீரரான 'ரஞ்சித்சிங்ஜி'யின் நினைவாக 1934 ஆம் ஆண்டு இந்தத் தொடர் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் கிரிக்கெட் சங்கங்களின் அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டித் தொடரே, தேசிய அணிக்குச் சிறந்த இளம் வீரர்களைத் தேர்வு செய்வதற்கான முதன்மைத் தளமாக விளங்கி வருகின்றது.
































