Oct 28, 2026 - 01:32 PM

நட்சத்திர தம்பதியான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இந்தியில் ‘காஃபி வித் கரண் சீசன் 9’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் தங்களது காதல் குறித்தும் திருமணம் குறித்தும் மனம் திறந்து பேசியிருந்தனர்.
அப்போது ராஷ்மிகா, முதலில் தான் தான் விஜய் தேவரகொண்டாவிடம் திருமண விருப்பத்தை தெரிவித்ததாகவும் அதற்கு விஜய் தேவரகொண்டா தன்னிடம் 100 முறை புரொபோஸ் செய்ய சொன்னதாகவும் நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார். இதனால் விஜய் தேவரகொண்டா ஆணாதிக்க மனநிலையில் இருப்பதாக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தது.
இந்த விமர்சனத்துக்கு ராஷ்மிகா மந்தனா பதிலடி கொடுத்தார். அவர் தனக்கு பிடித்த நபரிடம் 100 முறை என்ன 1,000 முறையும் கேட்பேன் எனக் கூறியிருந்தார். விஜய் தேவரகொண்டாவும் தங்கள் உறவு மிகவும் மகிழ்ச்சிகரமானது எனத் தெரிவித்திருந்தார். மேலும் எங்களது கருத்தில் அதிருப்தி உடையவர்கள் தங்கள் கருத்தை உள்ளுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இருவரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நிலையில் தற்போது அடுத்தக்கட்டமாக பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர்.
தம்பதியின் மேலாளர் பி. நிஷாந்த் குமார், ஹைதராபாத் சைபர் கிரைம் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். அதில் தம்பதிகளை குறிவைத்து சமூக ஊடகத் தளங்களில் பரப்பப்படும் தவறான மற்றும் அவதூறு கருத்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான ஆதாரங்கள் மற்றும் இணைய இணைப்புகளும் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் தொடர்பாக தம்பதி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நியாயமான விமர்சனங்களையோ அல்லது கருத்துச் சுதந்திரத்தையோ கட்டுப்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை. மாறாக, முற்றிலும் பொய்யான தகவல்கள் மற்றும் சட்டத்தை மீறக்கூடிய இணையச் செயல்பாடுகளைத் தடுப்பதே இந்தப் புகாரின் நோக்கம். எங்கள் உறவு குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம்” எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
































