Oct 29, 2026 - 01:41 PM

எந்தவொரு அதிகாரியையும் விசேடமாகப் பாதுகாப்பதற்காகப் பொலிஸார் ஒருபோதும் செயற்படமாட்டார்கள் என்றும், ஏதேனும் ஒரு அதிகாரி தவறிழைத்தால், சட்டத்திற்குப் புறம்பாக நடந்துகொண்டால், சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அல்லது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராகச் சட்டரீதியாகவும் ஒழுக்காற்று ரீதியாகவும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
முழு நாடுமே ஒன்றாக தேசிய செயல்பாட்டின் முன்னேற்றம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கடந்த நாட்களில் பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர்கள் உயிரிழந்தமை மற்றும் காயமடைந்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஹோமாகம சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸார் தற்போது பூரண விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சம்பவத்திற்கு முந்தைய நாள், சம்பவம் நடந்த நாள் மற்றும் மறுநாள் ஆகிய அனைத்து சாட்சியங்களையும் பதிவு செய்து நீதிமன்றத்தில் அவற்றை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ், பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 125 ஆம் பிரிவின் கீழ் விசேட விசாரணைக் குழுவொன்றிடம் (மேல் மாகாண தெற்குப் பிரிவின் விசேட குழு) இந்த விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக ஹோமாகம தலைமையகப் பொலிஸ் பரிசோதகர், குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, சோதனைகளுக்கு உதவியளித்த போதைப்பொருள் பிரிவின் அதிகாரி (Vice OIC) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆகியோரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொழும்பு தெற்குப் பிரிவின் விசாரணை முடிவுகளின் அடிப்படையில், இந்த மரணம் தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான துரதிர்ஷ்டவசமான சம்பவங்களைத் தடுப்பதற்குப் பொலிஸ் மா அதிபர் தொடர்ச்சியாக வழிகாட்டல்களை வழங்கி வருகின்ற போதிலும், சில அதிகாரிகளின் அலட்சியப் போக்கினாலேயே இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன என்றும், இனிவரும் காலங்களில் இவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வூட்லர் வலியுறுத்தினார்.
இதனிடையே, கொபெய்கனே பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒருவர் குறித்துக் கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் சென்று அச்சந்தேகநபரைக் கைது செய்ததாகவும், பின்னர் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டார்.
இருப்பினும், அந்தச் சந்தர்ப்பத்தில் சில பொதுமக்கள் அச்சந்தேகநபரைத் தாக்கியதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மூன்று பொதுமக்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பிலும் பிரிவுப் பொறுப்பதிகாரி மற்றும் மஹவ உதவிப் பொலிஸ் அத்தியாட்சகரின் மேற்பார்வையில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், திருகோணமலை பொலிஸ் காவலில் இருந்த மூன்று சந்தேகநபர்களுக்கு ஏற்பட்ட வெட்டுக்காயங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அது குறித்துப் பிரிவுப் பொறுப்பதிகாரியிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், அது கிடைத்ததும் விபரங்கள் அறிவிக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்தார்.
































