Oct 30, 2026 - 05:14 PM

உலகிலேயே மிகப்பெரிய கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளமான பைனான்ஸிலிருந்து (Binance) ஹேக்கர்கள் $6.3 பில்லியன் மதிப்பிலான கிரிப்டோ சொத்துக்களைத் திருடியுள்ளனர். இது கிரிப்டோ வரலாற்றிலேயே மிகப்பெரிய திருட்டாகப் பதிவாகியுள்ளதுடன், இந்தத் தாக்குதலுக்கு வடகொரியாவே காரணம் எனப் பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தச் செய்தியைத் தொடர்ந்து கிரிப்டோகரன்சிகளின் விலைகள் சரிந்தன. அதேவேளையில், பைனான்ஸ் தளம் பணத்தை வெளியேடுக்கும் (withdrawals) சேவையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதுடன், பயனர் இழப்புகளைத் தானே ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்துள்ளது.
திருடப்பட்ட சொத்துக்களில் சுமார் பாதியளவு, டெதர் (Tether), சர்க்கிள் (Circle) மற்றும் டிரம்பின் ஆதரவு பெற்ற வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்ஷியல் (World Liberty Financial) போன்ற ஸ்டேபிள்காயின் நிறுவனங்களால் விரைவாக முடக்கப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை பிற்பகுதியில் சுமார் 20 நிமிடங்களுக்குள் இந்த பிரம்மாண்டத் திருட்டு நடந்து முடிந்துள்ளது. இது இதற்கு முன்னர் வடகொரியா மீது சுமத்தப்பட்ட பெரிய அளவிலான தாக்குதல்களைப் போலவே உள்ளதாக அமெரிக்காவின் பிளாக்செயின் பகுப்பாய்வு நிறுவனங்களான TRM Labs மற்றும் Chainalysis தெரிவித்துள்ளன.
கடந்த 2025 ஆம் ஆண்டு பைபிட் (Bybit) கிரிப்டோ தளத்தில் நடந்த திருட்டைப் போலவே, பைனான்ஸ் பயன்படுத்தும் வேலட்களை (wallets) ஹேக்கர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வேலட்களுக்குப் பணத்தை அனுப்பும் வகையில் ஹேக்கர்கள் உத்தரவிட முடிந்தது என்று TRM கூறியுள்ளது.
அந்த பைபிட் தாக்குதலுக்குப் பியாங்யாங் (வடகொரியா) தான் காரணம் என அமெரிக்காவின் எஃப்.பி.ஐ (FBI) குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
"இந்தத் தாக்குதலுக்கு வடகொரியாவின் முன்னணி ஹேக்கிங் பிரிவே காரணம் என TRM கருதுகிறது" என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
TRM மற்றும் Chainalysis ஆகிய இரு நிறுவனங்களுமே இந்தத் தாக்குதலுக்கு வடகொரியாவே காரணம் என்பதில் தங்களுக்கு அதிக நம்பிக்கை இருப்பதாகக் கூறியுள்ளன.
வடகொரியா தனது அரசு சார்ந்த சைபர் பிரிவுகளை உளவு பார்ப்பதற்கும், நிதித் திருட்டிற்கும், வருவாய் ஈட்டுவதற்கும் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருவதாக அமெரிக்கா மற்றும் தென்கொரிய அதிகாரிகள் மட்டுமன்றி சைபர் பாதுகாப்பு நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். ஆனால் வடகொரியா வழக்கம்போல இதனை மறுத்து வருகிறது.
பயனர்களின் நிதி பாதுகாப்பாக உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சொத்துக்களில் சிலவற்றை முடக்க பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், இதுவரை சுமார் $3 பில்லியன் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணிநேரத்திற்குள் பணத்தை வெளியேடுக்கும் சேவையை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், மீதமுள்ள $3.3 பில்லியன் நிலை குறித்து அது எதுவும் குறிப்பிடவில்லை.
"உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது, ஒவ்வொரு இழப்பையும் நாங்கள் ஈடுசெய்கிறோம்" என்று பைனான்ஸ் இணை தலைமை நிர்வாக அதிகாரி (Co-CEO) ரிச்சர்ட் டெங் X தளத்தில் பதிவிட்டுள்ளார். "எங்களது விசாரணை எந்தவொரு தனிநபரின் மீதும் பொறுப்பைச் சுமத்தவில்லை" என்றும் அவர் கூறினார்.
சந்தை சீரடைவதற்கு முன்பாக பிட்காயின் (Bitcoin) ஆறு வாரங்களில் இல்லாத குறைந்த அளவான $76,368 ஐ எட்டியதுடன், ஈதர் (Ether) 3%க்கும் அதிகமாகச் சரிந்து இரண்டு மாதங்களில் இல்லாத குறைந்த அளவான $2,178 ஐ எட்டியது.
காயின்ஜெக்கோ (CoinGecko) தகவலின்படி, பைனான்ஸ் கட்டணங்களைச் செலுத்தப் பயன்படும் பி.என்.பி (BNB) டோக்கன் கடந்த 24 மணிநேரத்தில் 5% சரிந்து $709.70 ஆகக் குறைந்தது. அதேவேளையில், கிரிப்டோ சந்தை பங்குச் சந்தைகளிலும் சரிவை ஏற்படுத்தியது.
பாதிப்பு எதுவும் இல்லை எனக் கூறிய கிரிப்டோ பரிவர்த்தனை நிறுவனமான காயின்பேஸ் குளோபல் (Coinbase Global) பங்குகள் 4.8% சரிந்தன. அதேபோல பிட்காயின் வாங்குபவரான ஸ்ட்ராடஜியின் (Strategy) பங்குகள் அமெரிக்க வர்த்தகத்தில் சுமார் 6% வரை சரிந்தன.
































