Oct 30, 2026 - 11:04 PM

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் காணப்பட்ட பல குறைபாடுகள், முன்மொழியப்பட்டுள்ள 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திலும்' உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சட்டமூலம் திருத்தப்பட வேண்டிய விதம் குறித்த 9 பரிந்துரைகளையும் முன்வைத்தே அந்த அலுவலகம் இதனை வலியுறுத்தியுள்ளது.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கடந்த 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் இந்த முன்மொழியப்பட்ட சட்டமூலமானது, தன்னிச்சையான செயற்பாடுகள் மற்றும் பாகுபாடுகளைத் தடுத்தல் தொடர்பான ஐ.நா. சட்டக் கொள்கைகளுக்கு இணங்கத் தயாரிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் இருந்த பல குறைபாடுகள் இந்தச் சட்டமூலத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இந்தச் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் அது குறித்து முழுமையான மறுஆய்வு ஒன்றை மேற்கொள்ளுமாறு அந்த அலுவலகம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்காக சுயாதீன நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் சட்ட நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, முன்மொழியப்பட்ட சட்டமூலம் திருத்தப்பட வேண்டிய விதம் குறித்து அந்த அலுவலகம் 9 பரிந்துரைகளையும் வெளியிட்டுள்ளது:
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணங்களை உறுதியான மற்றும் தெளிவான முறையில் சமர்ப்பித்தல், கருத்துச் சுதந்திரம் மற்றும் சிவில் செயற்பாடுகளுக்கான உரிமைகளைக் குற்றச் செயல்களாக மாற்றக்கூடிய வாசகங்களை வெளிப்படையாகத் திருத்துதல் அல்லது நீக்குதல்.
ஒவ்வொரு கைது மற்றும் தடுத்து வைத்தல் நடவடிக்கையையும் தாமதமின்றி சுயாதீனமான மற்றும் செயற்பாட்டு ரீதியான நீதிமன்ற மேற்பார்வைக்கு உட்படுத்துதல்.
சித்திரவதை, துன்புறுத்தல், தன்னிச்சையான தடுத்துவைப்பு மற்றும் பலவந்தமான காணாமல் போதல்களுக்கு எதிரான பாதுகாப்பை வலுப்படுத்துதல்.
உரிய செய்முறைகள் மற்றும் நியாயமான நீதி விசாரணையை உறுதி செய்தல்.
வெளிநபர்களைப் பரிசோதித்தல், பிரவேசித்தல் மற்றும் கையகப்படுத்துதல் போன்ற அதிகாரங்களுக்கு நீதிமன்ற பிடியாணையை பெறுவதைச் சட்டமாக்குதல்.
சிவில் பொலிஸாருக்கான முன்னுரிமையை உறுதி செய்தல்.
சுயாதீன மேற்பார்வை, பொறுப்புக்கூறல் மற்றும் நிவாரணங்களை ஆக்கபூர்வமாக நிறுவுதல்.
சட்டவிலக்கு (Immunity) தொடர்பான வாசகங்களைச் உறுதியான முறையில் சமர்ப்பித்தல்.
சட்டமூலம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு முன்னர் அர்த்தமுள்ள பொதுமக்களின் கருத்துக் கேட்பை நடத்துதல்.
மேலும், பயங்கரவாதச் செயல்கள் குறித்த வரைவிலக்கணம் உண்மையாகவே பயங்கரவாதத் தன்மையைக் கொண்ட, திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறைச் செயல்களாகத் துல்லியமாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
இந்தச் சட்டமூலத்தின் மூலம் "ரகசியத் தகவல்கள்" என வரையறுக்கப்பட்டுள்ள விடயங்கள், செய்தி ஊடக மூலங்கள் மற்றும் சட்டத் தொழிலின் சிறப்புரிமைகளின் பாதுகாப்பது உள்ளிட்டவற்றுடன் துல்லியமாக வரையறுக்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.
































