Nov 2, 2026 - 02:34 PM

திமுக ஆட்சியில் தனியார் பாடசாலைகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க, கட்சி நிதி என்ற பெயரில் 400 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை 3 நாள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக ஆட்சியில் தனியார் பாடசாலைகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க, கட்சி நிதி என்ற பெயரில் 400 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை 5 நாள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, மத்திய குற்றப்பிரிவு பொலிஸ், சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி எல்.எஸ்.சத்திய மூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பொலிஸ் தரப்பு மற்றும் அன்பில் மகேஸ் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இன்று தனது தீர்ப்பினை வழங்கினார்.
தீர்ப்பில், “இன்று மதியம் 1.00 மணியில் இருந்து 4-ம் திகதி வரை 3 நாள் பொலிஸ் காவலில் எடுத்து அன்பில் மகேஸை விசாரிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ அவரை துன்புறுத்தக் கூடாது.
சட்டத்தரணி உடன் இருந்தாலும், விசாரணையை கேட்கக் கூடாத தொலைவில் தான் அவர் இருக்க வேண்டும்.’ என நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், அன்பில் மகேஸின் பிணை மனு மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மின்னனு சாதனங்களை திரும்பத் தரக் கோரிய மனுக்கள் மீதான விசாரணை நவ.5-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
































