Nov 6, 2026 - 04:22 PM

இலங்கையின் ஆடை ஏற்றுமதியானது 2026 செப்டம்பர் மாதத்தில் மீண்டும் வளர்ச்சியை நோக்கியுள்ளது, இது இத்தொழிற்துறைக்கு ஒரு ஊக்கமளிக்கும் அறிகுறியாகும். இந்த ஆண்டின் கடந்த ஒன்பது மாதங்களுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி வருவாய் இன்னும் கடந்த ஆண்டை விடக் குறைவாகவே இருந்தபோதிலும், ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF), இந்தச் சமீபத்திய மாதாந்த முடிவை ஒரு சாதகமான முன்னேற்றப் படியாகக் கருதுகிறது.
குறிப்பிட்ட செப்டம்பர் மாதத்திற்கான ஆடை ஏற்றுமதி வருவாய் 416.99 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது 2025 செப்டம்பர் மாதத்தின் 403.01 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயுடன் ஒப்பிடுகையில் 3.47% வளர்ச்சியாகும். இத்தொழிற்துறையின் இரண்டு மிகப்பெரிய சந்தைகளான அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்த வளர்ச்சிக்கு முதன்மையாக வழிவகுத்தன. அமெரிக்கா, இதற்கான ஏற்றுமதி 7.17% அதிகரித்து, 172.03 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா தவிர்த்து இதற்கான ஏற்றுமதி 6.5% அதிகரித்து, 132.46 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
பல்வேறு சர்வதேசச் சந்தைகளுக்கான ஏற்றுமதிச் செயல்பாடுகள் கலவையானதாகவே காணப்பட்டன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி அதிகரித்த போதிலும், பிரித்தானியா இதற்கான ஏற்றுமதி 5.92% வீழ்ச்சியடைந்து, 47.33 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது. ஏனைய பிற நாடுகளுக்கான ஒட்டுமொத்த ஆடை ஏற்றுமதி 3.89% வீழ்ச்சியடைந்து, 65.17 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
ஆண்டின் ஒட்டுமொத்தக் கூட்டுப் புள்ளிவிவரங்கள் மிகவும் கவலைக்குரிய ஒரு யதார்த்தத்தையே நமக்குக் காட்டுகின்றன. 2026 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில், மொத்த ஆடை ஏற்றுமதி வருவாய் 3,588.46 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியின் வருவாயான 3,798.25 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் 5.52% வீழ்ச்சியாகும். இதன் மூலம் இலங்கைக்குச் சுமார் 210 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. செப்டம்பரில் கிடைத்துள்ள இந்த ஒரு மாத கால நேர்மறை வளர்ச்சி வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், இவ்வளவு பெரிய நிதியியல் இடைவெளியை அதனால் உடனடியாக நிரப்பிவிட முடியாது.
கடந்த ஒன்பது மாதங்களில் அனைத்து முக்கிய சர்வதேசச் சந்தைகளிலும் இந்த ஏற்றுமதி வீழ்ச்சி பரவிக் காணப்படுகிறது. பிரித்தானியா, இதில் மிகக் கடுமையான வீழ்ச்சியாக 10.85% வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், இதற்கான ஏற்றுமதி 5.44% குறைந்துள்ளது. ஏனயை பிற சந்தைகளுக்கான ஏற்றுமதி 5.43% வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்கா, இதற்கான ஏற்றுமதி 3.69% குறைந்துள்ளது. இது ஏனைய முக்கிய சந்தைகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவிலான வீழ்ச்சியாகும்.
பெரிய வர்த்தக நாடுகளின் மாறிவரும் வர்த்தகப் போக்குகள் உலகளாவிய ஆடைத் துறைச் சூழலை மறுவடிவமைத்து வருகின்றன, அமெரிக்காவின் இறக்குமதித் தரவுகளின்படி, கடுமையான அமெரிக்க வரி விதிப்புகள் காரணமாக, 2026 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் அமெரிக்காவிற்கான சீன ஆடை ஏற்றுமதி சுமார் 34% வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்புகள் காரணமாக, சீனாவும் இந்தியாவும் தங்களது கவனத்தை ஐரோப்பியச் சந்தை பக்கம் திருப்பியுள்ளன. இதனால் ஐரோப்பியச் சந்தையில் கடுமையான விலைப்போட்டி உருவாகியுள்ளது. 2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த ஆடை இறக்குமதியில் சீனாவின் பங்கு 26.9%-லிருந்து 28.6% ஆக உயர்ந்துள்ளது. உலகளாவிய ஒட்டுமொத்தத் தேவை மந்தமாக இருக்கும் இக்காலகட்டத்தில், சீன மற்றும் இந்தியப் போட்டிகளால் ஐரோப்பியச் சந்தை மிகவும் பரபரப்பாகவும் நெரிசலாகவும் மாறியுள்ளதை இது காட்டுகிறது. எனவே, இலங்கை உற்பத்தியாளர்கள் சர்வதேசச் சந்தையில் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமாயின், விலைச் சாதகம், நம்பகத்தன்மை மற்றும் தயாரிப்புப் பன்முகத்தன்மை ஆகியவற்றுக்கு மிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இந்த வர்த்தக நிலவரம் குறித்து ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் (JAAF) பொதுச்செயலாளர் யொஹான் லோரன்ஸ் கூறுகையில், "அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியச் சந்தைகளில் செப்டம்பர் மாதத்தில் ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சி மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. உலக சந்தையில் தேவை இருக்கும் பட்சத்தில் நமது உற்பத்தியாளர்களால் திறம்படப் போட்டியிட முடியும் என்பதை இது நிரூபிக்கிறது. இருப்பினும், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் நாம் இன்னும் ஐந்து சதவீதத்திற்கும் மேலாகப் பின்தங்கியே இருக்கிறோம். இந்த நேர்மறை மாதாந்த வளர்ச்சி வெறும் ஒரு மாதத்துடன் மட்டும் நின்றுவிடாமல் தொடர்ந்து நீடிக்க வேண்டுமாயின், எமது ஆடைத் தொழிற்துறைக்குத் தற்போது தடையற்ற, மலிவான விலையிலான மின்சாரக் கட்டணங்களும் அரசாங்கத்தின் ஆதரவான கொள்கைச் சூழலும் மிக அவசியமாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியச் சந்தைகளின் ஆடை விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளதால், செப்டம்பர் மாத முடிவை JAAF ஒரு ஊக்கமளிக்கும் அறிகுறியாகப் பார்க்கிறது; எனினும், இதனை இத்தொழிற்துறையின் முழுமையான ஒரு மீட்சியாக இன்னும் கருத முடியாது. இந்த நேர்மறை வளர்ச்சி வேகம் இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களிலும் தொடருமா என்றும், வீழ்ச்சியைச் சந்தித்துள்ள பிரித்தானியா போன்ற முக்கிய சந்தைகள் மீண்டும் மீட்சி பெறுமா என்றும் ஒட்டுமொத்த ஆடைத் தொழிற்துறையும் இப்போது மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
































