Nov 7, 2026 - 07:38 PM

தமிழகத்தின் கோவை பெரியார் அறிவுலகம் நூலகப் புத்தகக் கொள்முதலில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் காலத்தில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று (7) சென்னையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் "பெரியார் அறிவுலக நூலகத்துக்கான புத்தகக் கொள்முதலில் இந்தியாவிலேயே முதல் முறையாக ஏஐ (AI) மூலம் திமுக ஊழல் செய்துள்ளது.
கோவை பெரியார் அறிவுலகம் மட்டுமன்றி திருச்சி, கடலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலுள்ள நூலகங்களிலும் தலா 50 கோடி ரூபாய் மதிப்பிலும், மின்-நூலகங்களில் (e-libraries) 5 கோடி ரூபாய் மதிப்பிலும் இந்த ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டி, ஊழல் தடுப்புப் பொலிஸாரிடம் (Anti-Corruption Police) முறைப்பாடு அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, போலி பணத்தாள்களைப் போல் போலியான புத்தகங்களை உருவாக்கி திமுக அரசு இந்த விஞ்ஞான ஊழலை அரங்கேற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தினது தலைமையின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கிலேயே போலி எழுத்தாளர்களை உருவாக்கி புத்தகங்களை வாங்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
கடந்த ஜனவரி மாதம் திமுக ஆட்சியில் நூலக நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றபோதிலும், அவர்களின் பரிந்துரைகளைக் கருத்தில் கொள்ளாமல் மார்ச் மாதத்தில் புத்தகக் கொள்முதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் பல லட்சக்கணக்கான ரூபாய் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளதுடன், சில நிலுவைச் செலுத்தல்களும் எஞ்சியுள்ளன.
நம்பகத்தன்மை அற்ற ஒரு குறிப்பிட்ட பதிப்பகத்தில் இருந்தே சுமார் 1,500 புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழ் இணையதளம் ஒன்றில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கட்டுரையின் மூலமே இவ்வாறான 1,800-க்கும் மேற்பட்ட போலிப் புத்தகங்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டமை வெளிச்சத்திற்கு வந்தது.
விஜயா பாலு, ஜோதி சரவணன், ஜோதி ஹரிஹரன், திரிஷா விஜய், தாமரை பன்னீர், ராணி பன்னீர் போன்ற முன்னெப்போதும் கேள்விப்படாத கற்பனை எழுத்தாளர் பெயர்களில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களைக் கொண்ட புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இவை புத்தகங்கள் அல்லவெனவும், அவை குப்பைக்கு நிகரானவை என்றும் அமைச்சர் விமர்சித்தார்.
மாநிலம் முழுவதிலும் உள்ள நூலகங்களில் இடம்பெற்ற போலிப் புத்தகக் கொள்முதல் குறித்து ஆராய மாநில அரசு விசேட குழு ஒன்றை அமைத்துள்ளது.
சொந்த மனைவியின் நகைகளை அடகு வைத்துப் புத்தகங்களை வெளியிட்ட பதிப்பகங்களை தாம் அறிவதாகவும், ஆனால் கடந்த அரசாங்கம் ஏஐ தொழினுட்பத்தைப் பயன்படுத்தி பதிப்பகங்களையும் மாணவர்களையும் ஒரே நேரத்தில் ஏமாற்றி 2,000-க்கும் மேற்பட்ட போலிப் புத்தகங்களை வாங்கியுள்ளதாகவும் வேதனை தெரிவித்த அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாட்டு மாணவர்களிடம் திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
































