Nov 10, 2026 - 11:16 AM

ஹட்டன் மற்றும் அதனை அண்டிய மலையகப் பகுதிகளில் நேற்று (09) மாலை பெய்த கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக பெருவெள்ளம் மற்றும் இடி மின்னல் தாக்கங்கள் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் ஓயா பெருக்கெடுத்ததைத் தொடர்ந்து ஹட்டன் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. ஹட்டன் பேருந்து தரிப்பிடம், டன்பார் வீதி, எம்.ஆர். டவுன் வீதி, பிள்ளையார் ஆலய பகுதி மற்றும் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி ஆகிய இடங்கள் வெள்ளநீரில் மூழ்கியதால் கடுமையான வாகன நெரிசலும், போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
மேலும், ஹட்டன் நாலு பீலி, ஹிஜ்ஜிராபுர மற்றும் காமினிபுர உள்ளிட்ட பகுதிகளில் 30 இற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து பெறுமதியான பொருட்கள் சேதமடைந்தன. இதேவேளை, நேற்று நண்பகல் முதல் தொடர்ந்த மழையினால் பீலிஅத்தர பகுதி முழுமையாக நீரில் மூழ்கி 20 இற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன. அங்கு சிக்கியிருந்த மக்களை மீட்கும் பணிகளில் ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.
மறுபுறம், நேற்று மாலை 5:40 மணியளவில் லிந்துலை ஹோல்றீம் கொனன் தோட்டத்தில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தால் வீடு ஒன்று கடுமையாகச் சேதமடைந்தது. மின் இணைப்புப் பெட்டி முழுமையாக தீப்பிடித்து எரிந்ததுடன், வீட்டின் கூரை தூக்கி வீசப்பட்டு உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது.
இச்சம்பவத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மின்சார உபகரணங்களும் பொருட்களும் சேதமடைந்த போதிலும், வீட்டிலிருந்தவர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவம் தொடர்பில் கிராம உத்தியோகத்தர் சேத விபரங்களைச் சேகரித்துள்ளதுடன், லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
































