Nov 10, 2026 - 01:47 PM

டெங்கு ஒழிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முறையாகவும் விரைவாகவும் முன்னெடுப்பதற்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் புதிய 'டெங்கு நுளம்பு ஒழிப்பு செயல்பாட்டு அலுவலகம்' (Dengue Control Operations Office) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் அனர்த்த முன்னாயத்த மற்றும் அவசர கால பதிலளிப்பு பிரிவை மையமாகக் கொண்டு இந்த அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் வானிலை மாற்றங்கள் காரணமாகக் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளமையையும், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கையும் கருத்திற்கொண்டு, சுகாதார அமைச்சு நேற்று (9) முதல் 14ஆம் திகதி வரை 'விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தை' பிரகடனப்படுத்தியுள்ளது.
இதன்படி, டெங்கு அபாயம் நிலவும் 13 மாவட்டங்களிலுள்ள 74 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளை உள்ளடக்கியதாகச் செயல்படுத்தப்படும் இந்த விசேட ஒழிப்பு வாரத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் இந்தப் புதிய செயல்பாட்டு அலுவலகத்தின் மூலமாகப் மேற்பார்வை செய்யப்படவுள்ளன.

































