Nov 12, 2026 - 11:00 AM

உலகம் முழுவதும் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது தொடர்பாக சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு புதிய ஆய்வை நடத்தியது.
இந்தியாவில் 25 முதல் 64 வயதுக்கு உட்பட்ட 502 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நீரிழிவு நோய் குறித்து மக்களிடம் நிலவும் பல்வேறு தவறான புரிதல்களும், பரிசோதனை செய்து கொள்வதில் உள்ள தயக்கமும் தெரியவந்துள்ளன.
இந்தியாவில் 8 கோடியே 98 லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 43 சதவீதம் பேருக்கு தங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்படவில்லை. அதாவது சுமார் 3 கோடியே 86 லட்சம் பேர் நோய் இருப்பதே தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர்.
நீரிழிவு நோய் இருப்பது தெரியாமல் இருப்பதால், உரிய நேரத்தில் சிகிச்சையை தொடங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் நோயால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளை தடுப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் தங்களுக்கு இருப்பதை 84 சதவீதம் பேர் உணர்ந்துள்ளனர்.
ஆனால். நோய் குறித்து பலரிடம் தவறான கருத்துகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 2 ஆம் வகை நீரிழிவு நோய் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படும் என்று 14 சதவீதம் பேர் தவறாக நம்புகின்றனர்.
மேலும், 75 சதவீதம் பேர் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதை அறிய, அதற்கான அறிகுறிகள் வெளிப்பட வேண்டும் என்று கருதுகின்றனர். ஆனால், நீரிழிவு நோய் உள்ள பலருக்கு ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை அறிந்து கொள்வதற்காக பரிசோதனை செய்து கொள்ள மாட்டோம் என்று ஆய்வில் பங்கேற்றவர்களில் 48 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது 80 சதவீதம் பேருக்கு நோய் இருப்பது 2030 ஆம் ஆண்டுக்குள் கண்டறியப்பட்டிருக்க வேண்டும் என்று சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த ஆய்வு இந்தியா மட்டுமின்றி பிரேசில், சீனா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் நடத்தப்பட்டுள்ளது.
































